தொலைந்து போகாதீர்கள்

எம் வாழ்க்கையின் எதிர்காலம் பற்றிய சிந்தனைகள் பற்றி மனதுக்குள் எண்ணும் போதே உள்ளத்தில் பாரம் அதிகரித்துவிடுகின்றது. தனித்திருக்கும் போது தான் பலதரப்பட்ட சிந்தனைகள் வந்து மூளைக்குள் அமர்ந்துகொள்கின்றன. நம் எதிர்காலம் பற்றிய நமது எதிர்பார்ப்புக்கள் கண் முன்னே வந்து நிழலாடிச் செல்கின்றன. அதனை அடைந்துகொள்வதற்கான சூழலோ நாம் இப்பொழுது இருக்கும் நிலையில் சாத்தியப்படுவது சாத்தியமற்ற ஒன்று. அதனால் உள்ளம் நடக்குமா? நடக்காதா?, முடியுமா? முடியாதா? என்பன போன்ற வினாக்களைத் தொடுத்து எமக்குள்ளே அச்சத்தையும் ஏற்படுத்தி தேவையற்ற சிந்தனைகளையும் புகுத்திவிடுகின்றன. இதனால் தேவையில்லாமல் மன உளைச்சலும் மன அழுத்தமும் தான் அதிகரித்து எம்மை சோர்வுடையோராகவும் நோயாளியாகவும் மாற்றிவிடுகின்றது.

கால ஓட்டத்திற்கு ஏற்ப ஓடும் போது தான் மன உளைச்சல்கள் ஏற்படுவதனைக் குறைத்திட முடியும். எதையும் இலகுவாக எடுத்துக்கொண்டு முன்னே செல்லும் போது மனதும் தேவையற்ற சுமைகளை சுமந்துகொள்ளாது. இதனால் மனது இலகு தன்மையில் இருக்கும். மனது சுமைகளற்று இருக்கும் போது தான் சரியாக சிந்திக்க முடிவதோடு சிறப்பான முறையில் செயல்படக் கூடியதாகவும் இருக்கும்.

நம் எதிர்காலம் பற்றிய இலக்குகள், கனவுகள் என்பது நம்மிடம் இருப்பது அவசியமான ஒன்று. ஆனால் எம் எதிர்கால இலக்குகள், கனவுகள் எல்லாம் நாம் எண்ணிய உடனே நடந்திட வேண்டும் என்ற எதிர்பார்ப்பினை வைக்கும் போது தான் அது பற்றிய சிந்தனைகள் அதிகம் எமக்குள்ளே சுழன்று ஒரு வித அழுத்தத்தினை உருவாக்கிவிடுகின்றன. எந்த ஒரு விடயமும் நன்றாக நடக்க வேண்டும் என்றால் அதற்கு காலம் எடுக்கும். அதற்குரிய நேரத்தை, காலத்தை ஒதுக்கி செயற்படும் போது தான் அவை அடைவுகளை நோக்கி நகரும். அப்படி இருக்கும் போது உடனே நடைபெற வேண்டும் என்று நமக்கு நாமே அழுத்தம் கொடுப்பது தவறு.

தனிமைகள் கிடைக்கும் போது தேவையற்ற சிந்தனைகள் பற்றி எண்ணுவதை விட கிடைக்கும் தனிமையை நாம் விரும்பும் விடயங்களில் செலுத்துகின்ற போது அங்கு தனிமைக்கு இடம் இல்லாமல் போவதுடன் தனிமையில் கிடைத்த நேரம் கூட பயனுள்ளதாய் மாறிவிடும். இலக்குகளுக்காக ஓட வேண்டும் ஆனால் அவற்றை அடைவதற்காக தம்மை மன உளைச்சளுக்கு ஆளாக்கி நம்மை இழந்துவிடக் கூடாது. நடுநிலைமையாக இருந்துகொண்டு எம் இலக்கின அடைவுகளை நோக்கி எம் கவனத்தை செலுத்த வேண்டும். எனவே, தேவையற்ற சிந்தனைகளில் நேரத்தை செலவிட்டு மனதை குழப்பி மன உளைச்சளுக்கு ஆளாகாமல் மனத் தெளிவுடனும் மனச் சுமைகளற்றும் செயற்பட எம்மைத் தயார்படுத்துவது தான் எம் எதிர்கால வாழ்க்கையை அமைதியாய் கழிப்பதற்கு உதவியாய் இருக்கும்.

இவள்
எண்ணங்களின் எழுத்தழகி
அறூபா அஹ்லா

எழுதியவர் : அறூபா அஹ்லா (2-Jan-23, 8:59 am)
சேர்த்தது : அறூபா அஹ்லா
பார்வை : 71

மேலே