ஹைக்கூ உலா நூல் ஆசிரியர் கவிஞர் இராஇரவி   நூல் மதிப்புரை கவிஞர் டிஎன்இமாஜான், சிங்கப்பூர்

ஹைக்கூ உலா!

நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி  !

நூல் மதிப்புரை கவிஞர் டி.என்.இமாஜான், சிங்கப்பூர்!

வெளியீடு : வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு,
தியாகராய நகர், சென்னை-600 017. தொலைபேசி : 044 24342810, 24310769  பக்கம்120.விலை : ரூ. 80.


கவிஞர் இரா.இரவியின் ‘ஹைக்கூ உலா’ என்னும் ஹைக்கூ நூலை வாசித்தேன். இந்நூலில் இடம்பெற்ற அறம் சார்ந்த ஹைக்கூ கவிதைகள் என்னை மிகவும் கவர்ந்தன. இதில் உள்ள கவிதைகள் ஜப்பானிய ஹைக்கூ பாணியையோ, இலக்கணத்தையோ அடிப்படையாகவோ கொண்டிருக்காவிட்டாலும், தமிழுலகம் ஏற்றுக்கொள்ளும் வகையில் கருத்துச் செறிவோடு இருப்பது சிறப்பு.  

கைரேகையில் இல்லை
கைகளில் உள்ளது
எதிர்காலம்!

என்னும் கவிதையில் உழைப்பவனுக்கே எதிர்காலம் உண்டு என்னும் அறம் தெரிகின்றது. உழைப்பில் நாட்டம் கொள்ளாமல், கைரேகை பார்ப்பது வீண் என்பது தெளிவு.

திரும்ப கிடைக்காது 
வீணாக்கிய 
வினாடிகள்!

இந்த வரிகள் ‘காலம் பொன் போன்றது’ காலத்தை வீணாக்கக் கூடாது என்ற அறக்கருத்தை வலியுறுத்துகின்றது.

விவேகமன்று 
விளைநிலங்களில் 
கட்டிடங்கள் !

இக்காலத்தில் விளைநிலங்கள் முறையற்ற வகையில் அழிக்கப்படுகின்றது, அதைச் சுட்டிக் காட்டுகின்றது இக்கவிதை.

வருத்தத்தில் விவசாயி 
மகிழ்வில் மணற்கொள்ளையர் 
வறண்ட ஆறு!

மணல் கொள்ளை நடப்பதை அறத்தோடு ஆராய்ந்து சொல்கிறது இக்கவிதை.

நடுவதோடு சரி 
பராமரிப்பதில்லை  
மரம்!

எங்கும் மரம் நடுவது வலியுறுத்தப்படுகின்றது. அது செயல்படுத்தவும் படுகின்றது. ஆனால், தொடர்ந்து பராமரிக்கப்படுவதில்லை என, அறச் சீற்றத்துடன் சுட்டுகிறது கவிதை.

சாதியில் இல்லை 
எண்ணத்தில் உள்ளது 
உயர்வு தாழ்வு!

இந்தியாவில் உயர் சாதி, தாழ்ந்த சாதிப் பிரச்சனை பெரும் சவாலாக உள்ளது. அதை அழகாகச் சொல்கிறது கவிதை.

வன்முறை வளர்க்கும்
நட்பை அழிக்கும் 
மது!

அறமற்ற செயல்களில் மது குடித்தலும் ஒன்று. அந்த மதுக் குடித்தலால் ஏற்படும் தீமையை விவரிக்கிறது இந்தக் கவிதை.

கற்பனையின் உச்சம் 
ஏமாற்றமே உச்சம் 
இராசிபலன் !

இராசிபலனைத் தினமும் பார்த்து, வாழ்க்கையைத் தொலைத்துக் கொண்டிருக்கும் வீணர்களை ஏளனம் செய்யும் கவிதை இது.

நடிப்பில் வென்றனர் 
நடிகர் திலகத்தை 
அரசியல்வாதிகள்!

இன்றைய அரசியல்வாதிகள் எப்படி எல்லாம் மக்களிடம் நடித்து, அறமற்ற செயல்களைச் செய்கிறார்கள் என்பதை அழகாகப் படம் பிடிக்கிறது.  

அடுத்தவருக்குத் தீங்கு
நினைக்காதிருத்தல் 
அறம்!

மற்றவருக்குக் கெடுதல் செய்யாமல் இருப்பதும் ஓர் அறம் தான் என்பது தெளிவாகின்றது. இக்கவிதையில்.  

பகிர்ந்துண்ணும் பறவை
தனித்துண்ணும் மனிதன் 
உயர்திணை எது?

பறவைகள் தங்களுக்குக் கிடைக்கும் உணவுகளைப் பகிர்ந்துண்ணும்போது. மனிதன் அப்படிச் செய்கின்றானா என்பது கேள்விக்குறி!  

கேடு தரும் 
உள்ளத்திற்கும் உடலுக்கும்
பொறாமை!

பொறாமைப்படாமல் இருப்பது, நல்ல ஓர் அறச் செயல் என்பது, இக்கவிதையில் சுட்டப்படுகின்றது. 


நல்லவனுக்கு 
ஆயுதம்
உண்மை!

இந்த உலகில் அறத்துடன் நல்லவனாக வாழ்வதற்குத் துணையாகக் கொள்ள வேண்டிய சிறந்த ஆயுதம் ‘உண்மை’ என்பது அனைவரும் அறிந்த உண்மை. அதை எடுத்தியம்பும் இக்கவிதை ஒரு மகுடம்.
இதேபோல், அறம் சார்ந்த ஏராளமான கவிதைகள் இடம்பெற்று, இந்நூல் ஒரு பயனுள்ள நூலாக மிளிர்கின்றது.
-

எழுதியவர் : கவிஞர் இரா.இரவி (2-Jan-23, 10:55 am)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 48

மேலே