249 கைக்கூலி வாங்குவோனின் அடிமை சாசனம் – கைக்கூலி 5
கலி விருத்தம்
(விளம் விளம் மா கூவிளம்)
(மாச் சீரின் இறுதியில் குறிலோ, குறில்+ஒற்றோ தான் வரும். நெடில், நெடில்+ஒற்று வராது)
ஆசையால் வாங்கிடு மவனை யீந்தவர்
கேசமா மதிப்பரக் கீழ்நன் சென்னிதம்
ஆசன மாக்குவர் அடிமை நானெனச்
சாசனம் அவர்க்கவன் தந்த தென்னவே. 5
- கைக்கூலி, நீதிநூல்
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்
பொருளுரை:
ஆசை மிகுந்து கைக்கூலி வாங்கும் ஒருவனை, கைக்கூலி கொடுத்தவர் தன் தலையில் இருந்து உதிர்ந்த மயிரென மதிப்பார். அத்தகைய கீழான குணம் கொண்ட அவன் தலையைத் தாம் இருக்கும் இருக்கையாக்குவார்.
நான் உனக்கு அடிமை என்று கைக்கூலி கொடுத்தவரிடம் அவன் அடிமைச் சீட்டு எழுதிக் கொடுத்தது போலாகும்” என்று இப்பாடலாசிரியர் கூறுகிறார்.
ஈந்தவர் - கொடுத்தவர். ஆசனம் - இருக்கை. சாசனம் - அடிமைச் சீட்டு