336 தாழ்ந்தோர் உயர்ந்தோர் எனும்பேர் சார்பால் உண்டாம் - தீயரைச் சேராமை 5
கலி விருத்தம்
(விளம் விளம் மா கூவிளம்)
(மாச் சீரின் இறுதியில் குறிலோ, குறில்+ஒற்றோ தான் வரும். நெடில், நெடில்+ஒற்று வராது)
மண்ணியல் பாற்குண மாறுந் தண்புனல்
கண்ணிய பொருள்மணங் கலந்து வீசுங்கால்
புண்ணிய ராதலும் புல்ல ராதலும்
நண்ணினத் தியல்பென நவில லுண்மையே. 5
தீயரைச் சேராமை, நீதிநூல்
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்
பொருளுரை:
”குளிர்ச்சி பொருந்திய தண்ணீர், தான் சேர்ந்த நிலத்தின் இயல்பினால் அதன் தன்மையில் மாறுதல் அடையும். காற்று தான் பொருந்திய பொருளின் மணத்தைக் கலந்து வீசும்.
அது போல, மக்கள் உயர்ந்தோர் ஆவதும் தாழ்ந்தோர் ஆவதும் அவரவர் சார்ந்த கூட்டத்தின் தன்மையைப் பொறுத்து எனக் கூறுவது உண்மை யாகும்” என்று இப்பாடலாசிரியர் கூறுகிறார்.
கண்ணிய - பொருந்திய. கால் - காற்று.
புண்ணியர் - உயர்ந்தோர். புல்லர் - தாழ்ந்தோர். நண்ணல் - சார்தல். நவிலல் - கூறுதல்.