341 தெய்வம் இரங்கல் நோக்கித் தீயவர்க்கு இரங்குக - பிழை பொறுத்தல் 6
அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(காய் 4 மா தேமா)
நல்லவர்தீ யவரென்னா தெவரையுமே புவிதாங்கு
..நனிநீர் நல்குஞ்
செல்லருண னொளிபரப்புங் கால்வீசு மந்தரமுஞ்
..சேரு மொப்பொன்(று)
இல்லாதான் தீயவர்க்கா இரங்கிமனு வேடமுற்றான்
..எனிலன் னார்பாற்
செல்லாதுன் சினமனமே பொறுமையேதான் பெருமையன்றோ
..செப்புங் காலே. 6
- பிழை பொறுத்தல், நீதிநூல்
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்
பொருளுரை:
நெஞ்சே! நல்லவர் தீயவர் என்று கருதாமல் எல்லாரையும் இந்த நிலம் சுமக்கும். சுவையான நீரும் வழங்கும். உலாவரும் ஞாயிறு ஒளி தரும்.
காற்று வீசும். வானம் இடம் தரும். தனக்குவமை யில்லாத கடவுளும் தீயோர்க்காக இரக்கம் கொண்டு மக்கள் கோலம் கொண்டு எழுந்தருளினான்.
அதனால், அவர்களிடம் உன் சினம் செல்லாது. சொல்லப் போனால், பொறுமையே பெருமையாகும் அல்லவா” என்கிறார் இப்பாடலாசிரியர்.
கால் - காற்று. அந்தரம் - வானம். மனு - மக்கள். வேடம் - கோலம்.