337 நல்லார் பொல்லார் எனும்பேர் சார்பால் நண்ணும் - தீயரைச் சேராமை 6

கலி விருத்தம்
(விளம் விளம் மா கூவிளம்)
(மாச் சீரின் இறுதியில் குறிலோ, குறில்+ஒற்றோ தான் வரும். நெடில், நெடில்+ஒற்று வராது)

பாரினிற் பிறந்தபோ தெவரும் பண்பினார்
பூரிய ரெனப்பெயர் பூண்ட தில்லையால்
சீரிய ரென்னலுந் தீய ரென்னலுஞ்
சேரினத் தியல்பினாற் சேர்ந்த நாமமே. 6

- தீயரைச் சேராமை, நீதிநூல்
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

”உலகில் பிறந்த போது எவர்க்கும் உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்று பெயர் வைக்கப்படுவது இல்லை.

அதனால், நல்லவர் என்பதும், தீயவர் என்பதும் அவரவர் சேர்ந்த இனத்தின் தன்மையால் ஏற்பட்ட பெயரேயாகும்” என்கிறார் இப்பாடலாசிரியர்.

பண்பினார் - உயர்ந்தோர். பூரியர் - தாழ்ந்தோர். சீரியர் - நல்லவர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (5-Jan-23, 12:18 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 35

மேலே