566 உடம்பகப் பொறியை உய்ப்போன் கடவுள் - தெய்வத்தன்மையும் வாழ்த்தும் 24
அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)
(விளம் வருமிடத்தில் மாங்காய்ச்சீர் அருகி வரும்)
நாமறி யாது யிர்ப்பு
..கணந்தொறு நடக்க மெய்யுள்
தோமறு மியந்தி ரங்கள்
..தொழில்பல வியற்ற வுண்ணுஞ்
சேமவூண் சீர ணித்துத்
..தேகமெங் கணுமு லாவக்
காமரா ருயிரைக் காக்குங்
..கடவுள்பால் நடவாய் நெஞ்சே.24
- தெய்வத்தன்மையும் வாழ்த்தும், நீதிநூல்
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்
பொருளுரை:
மனமே! நாம் உணராமலே நம் உயிர்ப்பு இமைப்பொழுதும் ஓவாது நடந்து கொண்டிருக்கவும், உடலகத்துள்ள குற்றமற்ற பொறிகள் தத்தம் தொழில்களைச் செய்யவும், உண்ணும் உணவு நன்றாய்ச் செரித்துக் குருதியாக மாறி உடம்பு எங்கணும் உலவிச் செழுமையுறவும் தந்தருளி நம்மைக் காக்கும் கடவுளை உள்ளத்துற எண்ணி வழிபடுவாயாக.
இயந்திரம் - பொறி. சீரணித்தல் - செரித்தல்.