565 துன்பந் தருதல் தூய்மைக் கென்ப - தெய்வத்தன்மையும் வாழ்த்தும் 23

அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)
(விளம் வருமிடத்தில் மாங்காய்ச்சீர் அருகி வரும்)

நலன்கள்யா வுறினுந் தந்த
..நாதனைத் துதிமோ நோய்நாங்
கலங்கவே யுறினுந் தந்தை
..காதலர்ச் சினவல் போற்பிற்
பலன்கணாம் பெறவத் துன்பம்
..பணித்தன னிறையென் றுன்னி
விலங்கிடா தவன்றாள் நெஞ்சே
..விரைவில்நீ பரவி யுய்யே. 23

- தெய்வத்தன்மையும் வாழ்த்தும், நீதிநூல்
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

மனமே! பல்வேறு வகையான இன்ப நலங்களை எய்தும் பொழுதெல்லாம் அவற்றைத் தந்தருளிய முழுமுதல்வனை வழுத்துதல் வேண்டும்.

தவமிருந்து பெற்று வளர்க்கும் தாய் தந்தையர் தம் சேய் நலத்தின் பொருட்டு அவர்களைச் சினந்து கொள்வர்.

அதுபோல், நாம் நற்பயன் பெற்று உய்தற்பொருட்டு இடையிடையே துன்பங்களை வினைக்கீடாக இறைவன் ஈந்தருள்வன். அத்துன்புக்கு வருந்தி ஆண்டவனை மறந்திடாது அவன் திருவடியை விரைந்து வழுத்தி வாழ்வாயாக.

துதி - வழுத்து. நோய் - துன்பம். விலங்கிடாது - மறவாது. பரவி - வழுத்தி. உய் - வாழு.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (8-Jan-23, 4:25 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 9

சிறந்த கட்டுரைகள்

மேலே