96 நூலுணர்ந்தார் அயலானை நோக்கவும் அஞ்சார் – மாதரைப் படிப்பித்தல் 3
கலி விருத்தம்
(விளம் விளம் மா கூவிளம்)
(மாச் சீரின் இறுதியில் குறிலோ, குறில்+ஒற்றோ தான் வரும். நெடில், நெடில்+ஒற்று வராது)
(விளம் வருமிடத்தில் மாங்காய்ச்சீர் வரலாம்)
காவலன் பயத்தினாற் கற்பைக் காக்கின்ற
பாவையர் அரியநூல் பயன்தெ ரிந்திடில்
பாவபுண் ணியநெறி அறியும் பண்பினால்
சீவனீங் கினுமய லாரைச் சேர்வரோ. 3
– மாதரைப் படிப்பித்தல், நீதிநூல்
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்
பொருளுரை:
”கணவனிடம் உள்ள பயத்தினால் கற்பைக் காக்கின்ற பெண்கள், உண்மை நூல்களைக் கற்று அதனால் ஏற்படும் பயன்களைத் தெரிந்து கொள்வதாலும், பாவபுண்ணிய நெறிகளை அறிந்து கொள்ளும் பண்பினாலும் உயிரே போனாலும் பிற அயல் ஆடவரைச் சேர்வார்களா” என்ற கேள்வியை எழுப்பி, கல்வியறிவு பெற்று பாவபுண்ணியங்களை அறிந்த பெண்கள் பிற அறிமுகமில்லாத ஆண்களைக் கண்டு அஞ்சத் தேவையில்லை என்று இப்பாடலாசிரியர் கூறுகிறார்.
காவலன் - கணவன். அரியநூல் - உண்மை நூல். பாவ புண்ணியம் - தீமை நன்மை.
சீவன் - உயிர்.