97 மருந்துபோல் கல்வி பெண் மாண்பு தந்திடும் – மாதரைப் படிப்பித்தல் 4

கலி விருத்தம்
(விளம் விளம் மா கூவிளம்)
(மாச் சீரின் இறுதியில் குறிலோ, குறில்+ஒற்றோ தான் வரும். நெடில், நெடில்+ஒற்று வராது)

பொருந்துநற் கலைதெரி பூவை கற்பது
திருந்தியே மிகுமலால் தேய்ந்து போமெனல்
வருந்திடா துயிர்தரு மருந்தை மானிடர்
அருந்திடில் சாவரென் றறைத லொக்குமே. 4

– மாதரைப் படிப்பித்தல், நீதிநூல்
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

”நாற்பொருளும் பொருந்தும் உண்மை நூல்களைப் பெண்கள் ஆராய்ந்து அறிந்து கற்பதால் அறிவு வளர்ந்து மிகும் என்பது அன்றி, தேய்ந்து போகும் என்று சிலர் கூறுவது, வேதனைப்படாது உயிர்க்கு இனிமை தரும் அமிழ்தத்தை மக்கள் உண்டால் உயிர் நீங்குவார்கள் என்று சொல்வதற்கு ஒப்பாகும்” என்று பெண்களுக்கு கல்வி அமிழ்தம் போல பெருமை சேர்த்திடும் என்று இப்பாடலாசிரியர் கூறுகிறார்.

தெரி – ஆராய்ந்து, பூவை - பெண். மருந்து - அமிழ்து.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (9-Jan-23, 12:37 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 24

மேலே