228 அறிவிழப்புச் சாவால் கள் நஞ்சினுங் கொடிதாம் – மது அருந்துவதன் விளைவு 3
கலி விருத்தம்
(விளம் விளம் மா கூவிளம்)
(மாச் சீரின் இறுதியில் குறிலோ, குறில் ஒற்றோ தான் வரும். நெடில், நெடில் ஒற்று வராது)
சித்தமு மவசமாஞ் செயல்வி கற்பமாம்
நித்தமு மரணமா நெடிய துன்பமாம்
அத்தமு நாசமா மவிழ்த மின்மையாற்
பித்தினு நஞ்சினும் பெரிது கள்ளரோ. 3
– மது அருந்துவதன் விளைவு, நீதிநூல்
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்
பொருளுரை:
”கள்ளுண்பதால் புத்தியும், அறிவும் தன் வசமாய் இருப்பதில்லை. செய்யும் செயலும் தாறுமாறாகும். அதனால் தினமும் சாவும், பெருந்துன்பமும் ஏற்படும்; பொருள் அழியும்.
இதற்கு வேறு மாற்று மருந்து இல்லையாதலால், மனப்பிறழ்வையும் நஞ்சையும்விட, கள் மிகவும் கொடியது ஆகும்” என, கள் உண்பதால் அறிவிழந்து அனைத்தையும் இழப்பர் என்று இப்பாடலாசிரியர் தெரிவிக்கிறார்.
சித்தம் - உள்ளம், புத்தி, அறிவு. அவசம் - வசமின்மை; கட்டுக்கடங்காமை.
அத்தம் - பொருள். அவிழ்தம் - மருந்து.