462 அறமுடையாரை அனைவரும் புகழ்வர் - அறஞ்செயல் 14
எழுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா விளம் மா / விளம் விளம் மா)
ஒருவனைப் புதிதாக் காணினு மவனோ(டு)
= உறவுசெய் யினும்பணி கொளினும்
பெருமையோன் தீய னெனவறி யாமுன்
= பேசிடார் தீயனேற் பெயர்வார்
தருமநற் குணத்தைக் தீயரும் புகழ்வார்
= சழக்கினைச் சழக்கரு மிகழ்வார்
இருமைதீ ரறத்தின் பெருமையும் மறத்தின்
= இழிவுமீ துன்னுவாய் மனனே. 14
- அறஞ்செயல், நீதிநூல்
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்
பொருளுரை:
“நெஞ்சே! ஒருவனைப் புதிதாகக் கண்டாலும், அல்லது அவனுடன் நட்புச்செய்தாலும், அவனை வேலைக்கு வைத்துக் கொண்டாலும் நல்லவன் கெட்டவன் என்று யாரும் அவனைப் பற்றி அறிவதற்கு முன் சொல்லமாட்டார்கள். கெட்டவனானால், அவனை விட்டு அகன்று விடுவார்.
ஈகையும், நற்பண்பும் உடையவரைக் கெட்டவரும் புகழ்வார். குற்றத்தைத் தீயவரும் பழித்து இகழ்வார்கள்.
இது போல, குற்றம் நீங்கிய நன்மையின் மேன்மையும், பாவத்தின் கீழ்மையும் எண்ணிப் பார்” என்கிறார் இப்பாடலாசிரியர்.
பணி - வேலை. பெயர்வார் - நீங்குவார். சழக்கு - குற்றம். இருமை - குற்றம்.