வாங்கி யிருந்து தொளையெண்ணார் அப்பந்தின் பார் - பழமொழி நானூறு 253

இன்னிசை வெண்பா

நிலைஇய பண்பிலார் நேரல்லர் என்றொன்
றுளைய உரையா துறுதியே கொள்க
வளையொலி ஐம்பாலாய்! வாங்கி யிருந்து
தொளையெண்ணார் அப்பந்தின் பார். 253

- பழமொழி நானூறு

பொருளுரை:

வளையல்களின் ஒலியும், சுருண்டு தழைத்த ஐந்து பகுதியாகிய கூந்தலையுமுடையாய்!

அப்பத்தை உண்ண விரும்பினவர்கள் அதைக் கையில் வாங்கிய பின்னர்த் தொளைகள் இருக்கின்றன வென்று எண்ணி, குற்றங்கூறி அவற்றை நீக்குவாரில்லை;

அதுபோல, நிலைபெற்ற பண்பில்லாதவர் நடுவு நிலைமையை உடையவர் அல்லர் என்று மனம் வருந்தத்தக்க ஒரு சொல்லும் சொல்லாது அவரிடத்தில் தாம் கொள்ள நினைத்த உறுதியாகிய பயனையே கொள்க.

கருத்து:

நமது காரியத்தை முடிக்கவல்லாரது குறைகளைக் கூறித் திரிய வேண்டாம். காரியம் முடியுமாற்றையே நோக்குக.

விளக்கம்:

அப்பந்தின்பார் தொளையிருத்தல் கருதி நீக்குவாரல்லர்.

அதுபோல, காரியத்தில் கண்ணுடையாரும் அவருடைய குற்றங் கருதித் தமது பயனை இழவார்.

'வாங்கியிருந்து தொளை யெண்ணார் அப்பந் தின்பார்' என்பது பழமொழி.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (9-Jan-23, 9:29 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 26

மேலே