ஆற்றார் இவரென் றடைந்த தமரையும் தோற்றத்தாம் எள்ளி நலியற்க - பழமொழி நானூறு 252
நேரிசை வெண்பா
ஆற்றார் இவரென் றடைந்த தமரையும்
தோற்றத்தாம் எள்ளி நலியற்க - போற்றான்
கடையடைத்து வைத்துப் புடைத்தக்கால் நாயும்
உடையானைக் கவ்வி விடும். 252
- பழமொழி நானூறு
பொருளுரை:
காப்பாற்றாதவனாகி வாயிலை அடைத்து வைத்து அடித்தவிடத்து, நாயும் தன்னை உடையானைக் கவ்வித் துன்புறுத்தும். ஆகையால், தம்மையடைந்த சுற்றத்தார்களையும் நம்மை எதிர்க்க வலியிலர் என்று நினைத்து பிறருக்கு வெளிப்படுமாறு தாம் ஒருவரையும் இகழ்ந்து துன்புறுத்த வேண்டாம்.
கருத்து:
நம்மையடைந்த சுற்றத்தார்களை இகழ்ந்து நலியாதிருத்தல் வேண்டும்.
விளக்கம்:
அடைந்த உறவினர் எளியராயினும், நாய் கதுவினாற் போலத் தம்மால் இயன்ற சிறு தீங்கினை யாவது இயற்ற முற்படுவர்.
'போற்றான் கடையடைத்துப் புடைத்தக்கால் நாயும் உடையானைக் கவ்வி விடும்.' இஃது இச்செய்யுளில் வந்த பழமொழி.