சின்மொழியார் கையுறாப் பாணி பெரிது – நாலடியார் 362

நேரிசை வெண்பா

வழுக்கெனைத்து மில்லாத வாள்வாய்க் கிடந்தும்
இழுக்கினைத் தாம்பெறுவ ராயின், - இழுக்கெனைத்துஞ்
செய்குறாப் பாணி சிறிதே;அச் சின்மொழியார்
கையுறாப் பாணி பெரிது. 362

- பன்னெறி, நாலடியார்

பொருளுரை:

சோர்வு சிறிதுமில்லாத வாளின் காவலில் இருந்தும் மகளிர் ஒழுக்கந் தவறுதலைத் தாம் உறுவராயின், குளிர்ந்த மொழிகளைப் பேசும் அம்மகளிர் தமது வாழ்நாளிற் குற்றம் சிறிதுஞ் செய்யாத காலம் சிறிதே; மற்றுத் தம் கணவர்க்கு வயப்பட்டொழுகாக் காலம் பெரிதெனப்படுகிறது.

கருத்து:

மகளிர்க்கு நிறை காக்குங் காப்பே தலை.

விளக்கம்:

வாள் என்றது, வாள்வீரரின் காவல்; கிடத்தல், கட்டுப்பட்டிருத்தல். காவலினும் இழுக்குப் பெறுவராயின் நிறை சிறிதுமில்லாதவர் அம்மகளிரென்பது பெறப்படுதலின், அவர் தம் வாழ்நாளில் இழுக்கெனைத்துஞ் செய்குறாப் பாணி சிறிதே யெனப்பட்டது. பாணி என்றது காலம்.

‘எம் சொல்லற் பாணிநின்றன னாக"2 என்புழிப்போல. எனைத்துஞ் செய்குறாப் பாணி யென்றார் ஏதானும் வழுக்குடையராகவே யிருப்ப ரென்றற்கு. கையுறாமை - இங்கு வயமாயிராமை.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (9-Jan-23, 9:11 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 8

மேலே