மாண்ட மனையாளை யில்லாதான் இல்லகம் – நாலடியார் 361
இருவிகற்ப நேரிசை வெண்பா
மழைதிளைக்கு மாடமாய் மாண்பமைந்த காப்பாய்
இழைவிளக்கு நின்றமைப்பின் என்னாம்? - விழைதக்க
மாண்ட மனையாளை யில்லாதான் இல்லகம்
காண்டற் கரியதோர் காடு. 361
- பன்னெறி, நாலடியார்.
பொருளுரை:
மேகங்கள் தவழும் உயர்ந்த மாளிகையாய்ச் சிறப்பமைந்த பாதுகாப்புடையதாய் மணிகளால் இழைக்கப்பட்ட விளக்குகள் அங்கங்கும் இருந்து ஒளிவிடினும் அவ்வீட்டினால் என்ன பயன்?
மாட்சிமை வாய்ந்த விரும்பத்தக்க மனைவியை இல்லாதவனின் வீடு கண்கொண்டு பார்த்தற்கு இயலாததொரு கொடிய காடாகும்.
கருத்து:
மனையாள் இல்லாத வீடுவீடன்று, காடு எனப்படுகிறது.
விளக்கம்:
பெருமையும் காப்பும் ஒளியும் உடையதாயிருந்தாலும் வீட்டுக்கு உணர்வு விளக்காகிய மனையாள் இன்றியமையாதவள் என்பது கருத்து.
மழை திளைத்தல் – மேகம் இடைவிடாது தவழும்;
மாண்ட விழைதக்க மனையாள்: மனைமாட்சி மனைக்கு மங்கலமாகலின், இல்லாள் இல்லாத இல்லம், அறவோர் துறவோர்அந்தணர் விருந்து உறவோர் நண்பர் குழந்தைகள் பெரியோர் உலவுதலற்றுக் காண்பதற்கு அரியதொரு காடாயிருக்கும் எனப்பட்டது.