316 உண்மை யுணராது செருக்கல் தகாது - கல்விச் செருக்கு 6

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)
(விளம் வருமிடத்தில் மாங்காய்ச்சீர் வரலாம்)

எறும்புதன் பிலத்தைத் தன்னை
..யாவுமென் றுனல்போல் அண்டத்(து)
உறும்புவ னங்க ளெண்ணில்
..உவைமுன்னம் நரரும் பாரும்
இரும்புமுன் அணுவோ வாழி
..யெதிரொரு துளியோ நில்லா(து)
அரும்படி வத்தின் மாக்கள்
..அகம்அகம் மிகல்த காதால். 6

- கல்விச் செருக்கு, நீதிநூல்
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

”எறும்பானது தன்னையும் தன் குழியையுமே எல்லா உலகமும் என்று எண்ணுவது போல், அண்டத்தைச் சார்ந்த புவனங்களுக்கு எண்ணிக்கை இல்லை. அவைகளுக்கு முன் மக்களும் இந்த உலகமும் மலைக்கு முன் அணுவோ, உலகத்தின் எதிரே ஒரு துளியோ ஆகாது.

நிலையில்லாத அரிய உடம்பினை உடைய மக்கள் உள்ளத்துச் செருக்குக் கூடும்படி செய்வது பொருத்தமாகாது” என்கிறார் இப்பாட லாசிரியர். .

பிலம் - வளை; குழி. புவனம் – உலகம், இரும்பு - மலை. அகம் - உள்ளம்.
அகம் - செருக்கு. மிகல் - கூடுதல்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (9-Jan-23, 4:36 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 25

மேலே