325 மாறிவரும் செல்வத்தால் செருக்குறல் வசையே - செல்வச் செருக்கு 4
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)
சுழல்சக டக்கால் போலுந்
..தோன்றியே யழிமின் போலும்
அழன்மன வேசை போலும்
..அருநிதி மேவி நீங்கும்
பழமைபோ லதனை நம்பிப்
..பழியுறச் செருக்கல் மேக
நிழலினை நம்பிக் கைக்கொள்
..நெடுங்குடை நீத்த லொப்பே. 4
- செல்வச் செருக்கு, நீதிநூல்
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்
பொருளுரை:
”உருளும் வண்டிச் சக்கரம் போலவும், தோன்றி மறையும் மின்னலைப் போலவும், நஞ்சு மனதுடைய விலைமாது போலவும் அரிய செல்வம் பொருந்தி நீங்கும்.
அச்செல்வத்தை அழியாது இருக்குமென்று நம்பி வசை பெருகும்படி தற்பெருமை கொள்வது மேகத்தின் நிழலை நம்பிக் கையிலுள்ள பெரிய குடையை நீக்கி விடுவதற்கு ஒப்பாகும்” என்கிறார் இப்பாடலாசிரியர்.
சகடம் – வண்டிச் சக்கரம். அழியும் - மறையும். அழல் - நஞ்சு. பழைமை - தொன்மை; அறிவின்மை. பழி - வசை. நீத்தல் - நீக்கல்.