518 புலாலுண்போர் தெய்வத் தண்டனை அடைவர் - விலங்கினத்துக்கு இடர் செய்யாமை 5

அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
விளம் மா தேமா அரையடிக்கு
(விளம் வருமிடத்தில் மாங்காய்ச்சீர் அருகி வரும்)

காயிலை கிழங்கே தக்க
..கறியதா மதனை யுண்போர்
ஆயுள்நாள் வளரும் ஊழ்த்தல்
..அருந்துவோ ருயிர்கட் கெல்லாந்
தாயெனு மொருக ருத்தன்
..சாபத்தைப் பரிப்பா ரென்னிற்
பேயினுங் கொடிய வன்னார்
..பிழைக்குமா றெவன்கொல் அம்மா. 5

- விலங்கினத்துக்கு இடர் செய்யாமை, நீதிநூல்
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

மக்கள் உண்பதற்கு வாய்ப்புடைய காய், இலை, கிழங்கு, பருப்பு, கூலம், கறி, பழம் முதலிய மழையால் தரப்பெறும் தூய உணவே பொருந்தியதாகும். அவ்வுணவை உண்போர்க்கு வாழ்நாளும் வளரும்.

கொலையால் வரும் புலால் என்னும் இறைச்சியை உண்போர் எல்லா உயிர்கட்கும் தாயென்று பேசப் பெறும் ஒப்பிலா முழுமுதல்வனின் கடுந்தண்டனையை அடைவர். ஆயின்-ஐயோ! பேயினும் கொடிய அவர்கள் எவ்வாறு உய்வர்?

ஊழ்த்தல் - இறைச்சி. சாபம் - கடுந்தண்டனை. பரிப்பர் - அடைவர். பிழைத்தல் - உய்தல்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (10-Jan-23, 8:07 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 20

சிறந்த கட்டுரைகள்

மேலே