519 விலங்குக்கு இடர் விளைப்போன் நெஞ்சமிரும்பு - விலங்கினத்துக்கு இடர் செய்யாமை 6
அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)
(விளம் வருமிடத்தில் மாங்காய்ச்சீர் அருகி வரும்)
பற்றிநோய் செயப்பின் பற்றும்
..பதகரை வெரீஇவி லங்கு
சுற்றியே யோடுங் கத்தும்
..துன்புறும் வயிற்றைக் காலால்
எற்றிவீழ்ந் தெழும யங்கும்
..என்செயும் இவ்வி லங்கை
முற்றிய சினத்திற் பற்று
..மூர்க்கர்நெஞ் சிரும்போ கல்லோ. 6
- விலங்கினத்துக்கு இடர் செய்யாமை, நீதிநூல்
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்
பொருளுரை:
விலங்கினங்களைப் பிடித்துத் துன்புறுத்தத் தொடரும் அறிவிலாக் கொடியோரைக் கண்டு அவை நடுநடுங்கி ஓடும்; கதறும்; பொறுக்க முடியாத துன்பத்தை அடையும். வயிற்றில் காலால் அடித்துக் கீழ்விழும்; எழுந்து கலங்கும்; இவையன்றி வேறு என்ன செய்யும்? இத்தகைய விலங்கைச் சிறிதும் இரக்கமில்லாது முதிர்ந்த சினக் கொடுமையால் பற்றும் கொடியோர் நெஞ்சம் இரும்போ? கல்லோ?
பதகர் - அறிவிலார். மூர்க்கர் - கொடியோர்.