கம்ப ராமாயணக் கவி அழகும் நயமும் – 13 சுக்கிரீவன் இராவணன் முன்னே சென்று நிற்றல்
சந்தக் கலிவிருத்தம்
(கூவிளங்காய் தேமா)
.
காலவிருள் சிந்துகதி ரோன்மதலை கண்ணுற்(று)
ஏலவெதிர் சென்றடலி ராவணனை எய்தி
நீலமலை முன்கயிலை நின்றதென நின்றான்;
ஆலவிடம் அன்றுவர நின்றசிவன் அன்னான்! 7
- மகுட பங்கப் படலம், யுத்த காண்டம், கம்ப ராமாயணம்
பொருளுரை:
கரிய இருளை ஒழிக்கின்ற சூரியன் புதல்வனான சுக்கிரீவன் ஆற்றல் மிக்க இராவணனைக் கண்டு நெருங்கி எதிரே சென்றடைந்து (பாற்கடல் கடைந்த) அன்று கடலில் ஆலகால விடம் தோன்ற அஞ்சாது எதிர் நின்ற சிவபெருமானைப் போன்றவனாய் நீலகிரியின் முன்னால் கயிலாயகிரி நிற்பது போல நின்றான்.
கரிய நிறம் கொண்ட இராவணனுக்கு நீல மலையும், வெள்ளை நிறங்கொண்ட சுக்கிரீவனுக்குக் கயிலை மலையும் உவமை!