466 அறமே நல்லோர்க்கு அழியா வாழ்வு – அறஞ்செயல் 18
அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)
(விளம் வருமிடங்களில் மாங்காய்ச்சீர் வரலாம்)
இன்னமு தத்தின் முன்வே(று)
= இனிமையும் உளதோ பானு
முன்னமோர் சுடரு முண்டோ
= மோக்கத்திற் சுகம்வே றுண்டோ
துன்னற மேநல் லோர்க்குத்
= துகளறு செல்வ மாகும்
அன்னதை யன்றி வேறோர்
= ஆக்கமும் வேண்டுங் கொல்லோ. 18
- அறஞ்செயல், நீதிநூல்
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்
பொருளுரை:
”சாவு, மூப்பு தடுக்கவல்லமை உடைய இன்சுவையான அமுதத்தின் முன் வேறு இனிமையான பொருள் எவையும் உள்ளதா?
சூரியனின் முன் அதனின் மிக்கதொரு ஒளியுமுண்டா?
கடவுளின்பமாகிய மோட்சத்தை விட மிக்க இன்பமும் உண்டோ?
கல்வி கேள்வி அறிவு ஒழுக்கம் வாய்ந்த நல்லோர்க்குக் தூய நன்மையான செயல்களே குற்ற மற்ற வாழ்வாகும்.
இவைகளையன்றி வேறு பெரு வாழ்வு வேண்டுமா? சொல்லுங்கள்” என்கிறார் இப்பாடலாசிரியர்.
பானு - சூரியன். மோக்கம் - கடவுளின்பம். அறம் - நன்மை. துகள் - குற்றம். ஆக்கம்-வாழ்வு.