467 அறஞ்செய்வார்க்கே ஆண்டவன் இன்புண்டு - அறஞ்செயல் 19
அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)
(விளம் வருமிடங்களில் மாங்காய்ச்சீர் வரலாம்)
மன்னுள னேலுண் டாணை
= மகிழவுஞ் சிறையு முண்டாம்
முன்னுதே வுளனேற் பாவம்
= புண்ணியம் மோக்கம் அள்ளல்
என்னும்யா வையுண் டொப்பில்
= ஏணுளான் கோபந் தாங்கி
மன்னுவோர் யாவர் நெஞ்சே
= மறமொழித் தறஞ்செய் வாயே. 19
- அறஞ்செயல், நீதிநூல்
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்
பொருளுரை:
”மனமே! உலகினைக் காக்கும் வேந்தன் என்று ஒருவன் இருந்தால், அவன் ஆணைக்கு கட்டுப்பட்டு வழி நடப்போர்க்கு மகிழ்ச்சி தரும் மாளிகையும், ஒழுக்கத்தை மீறித் தீயவழி நடப்பவர்க்குத் துன்பந் தரும் சிறைக்கூடமும் உண்டு.
அது போல, கருதப்படுகின்ற தெய்வம் உள்ளது என்றால் தீமை, நன்மைகளின் பயன் நுகரும் இன்ப உலகு, துன்ப உலகு என்று சொல்லப்படும் எல்லாம் உண்டாம்.
ஒப்பில்லாத எல்லாம் வல்ல கடவுளின் சினத்தைப் பொறுத்து வாழ்வார் யார்? அதனால், பாவத்தை யொழித்துப் புண்ணியம் செய்து வாழவேண்டும்” என்கிறார் இப்பாடலாசிரியர்.
மன் - வேந்தன். ஆணை - சட்டம். மகிழகம் - மாளிகை. சிறை - காவற்கூடம்.
மறம் - பாவம். முன்னுதல் - கருதுதல். அள்ளல் - துன்புலகு. ஏண் - வலிமை.
மன்னுவோர் - வாழ்வோர்.