பதிப்பட வாழ்வார் பழியாய செய்தல் மதிப்புறத்துப் பட்ட மறு - பழமொழி நானூறு 258

இன்னிசை வெண்பா

விதிப்பட்ட நூலுணர்ந்து வேற்றுமை யில்லார்
கதிப்பவர் நூலினைக் கையிகந்தா ராகிப்
பதிப்பட வாழ்வார் பழியாய செய்தல்
மதிப்புறத்துப் பட்ட மறு. 258

- பழமொழி நானூறு

பொருளுரை:

நல்ல நெறிகள் அமைந்த நூல்களை அறிந்து நூல்களின் விதிகளுக்கும் தமது வாழ்விற்கும் வேறுபாடு இல்லாதவர்கள், மாறுபட்டு எழுந்தோர்களுடைய நூலின் கொள்கைகளைத் தம் வன்மையால் வென்று தலைமைப் பேறுற வாழ்கின்ற அறிஞர்கள் இகழ்தற்குரிய செயல்களைச் செய்தல் திங்களின்கண் இலங்கும் களங்கம் போல் விளங்கித் தோன்றும்.

கருத்து:

அறிவுடையோர் மாசுற்ற செயல்களைச் செய்வாராயின் அது தேசுற்றுத் தோன்றும்.

விளக்கம்:

மதிப்புறம், புறம்: ஏழனுருபு. மதியின் புறத்தில் ஊர்கோளென வளைந்து விளங்கித் தோன்றும் களங்கம் போல, அறிவுடையோர் செய்த பழியாயின அவரைச் சூழ்ந்து நின்று விளங்கும் என்று பொருள் கொள்ளினும் பொருந்தும். இதற்கு மதிப்புறம், மதியின் ஓரம் என்று பொருள் கொள்க.

'மதிப்புறத்துப் பட்ட மறு' -இஃது இச்செய்யுளில் எடுத்தாண்ட பழமொழி.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (20-Jan-23, 9:09 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 24

மேலே