போற்றிப் புறந்தந் தகப்பட்ட ஒண்பொருட்கும் காப்பாரிற் பார்ப்பார் மிகும் - பழமொழி நானூறு 259

நேரிசை வெண்பா
(’க்’ ‘ட்’ ‘ற்’ ‘ப்’ வல்லின எதுகை)

நோக்கி யிருந்தார் இமைக்கும் அளவின்கண்
நோக்கப் படினும் உணங்கலைப் - புட்கவரும்
போற்றிப் புறந்தந் தகப்பட்ட ஒண்பொருட்கும்
காப்பாரிற் பார்ப்பார் மிகும். 259

- பழமொழி நானூறு

பொருளுரை:

வெயிலில் காயும் பொருள்களைப் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் இமை கொட்டும் அளவிலே எங்ஙனம் காவல் செய்து கொள்ளப்படினும் அவ்வுணங்கலைப் புட்கள் திருடிச்செல்லும். அதுபோல, அரண் செய்து பாதுகாத்துத் தமக்காக வைக்கப்பட்டிருக்கும் ஒள்ளிய பொருளுக்கும் காவல் செய்வாரை விட அதனைக் கொள்ளப் பார்க்கின்றவர்கள் மிகப் பலராவர்.

கருத்து:

பொருளைக் கொள்ளப் பார்க்கின்றவர்கள் பலராதலின், உடனே அறஞ் செய்து விடுதல் நல்லது.

விளக்கம்:

இமைக்கும் அளவாவது ஒரு மாத்திரை நேரம். 'கண்ணிமை நொடியன அவ்வே மாத்திரை' என்றாராகலின். பொருளை எங்ஙனம் பாதுகாவல் செய்யினும் பிறரால் வவ்வப்படுதல் உறுதி. ஆதலின், உடனே அறஞ்செய்க எனப்பட்டது.

'காப்பாரிற் பார்ப்பார் மிகும்' என்பது பழமொழி.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (20-Jan-23, 9:32 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 20

சிறந்த கட்டுரைகள்

மேலே