அந்நெல் வயனிறையக் காய்க்கும் வளவய லூர மகனறிவு தந்தை யறிவு – நாலடியார் 367

நேரிசை வெண்பா

செந்நெல்லால் ஆய செழுமுளை மற்றுமச்
செந்நெல்லே யாகி விளைதலால் - அந்நெல்
வய’னி’றையக் காய்க்கும் வளவய லூர!
மக’ன’றிவு தந்தை யறிவு! 367

- பன்னெறி, நாலடியார்

பொருளுரை:

செந்நெல் வயல் நிறைய விளைந்து கிடக்கும் வளமான கழனிகளையுடைய ஊரனே!

சாலி என்னும் உயர்ந்த செந்நெல்லின் விதையினால் உண்டான செழுவிய முளை பின்னும் அச்செந்நெற் பயிராகவே தோன்றி விளைதலால், புதல்வன் அறிவு அவன் தந்தையின் அறிவு வகையை ஒத்ததாகும்.

கருத்து:

புதல்வனுடைய அறிவு ஒழுக்கங்களை விரும்புந் தந்தை, தான் நல்லறிவு நல்லொழுக்கம் உடையவனாய் விளங்குதல் வேண்டும்.

விளக்கம்:

செந்நெல், நெல்லின் உயர்ந்த இனத்தைச் சேர்ந்தது. காய்க்கும் என்றது, ஒரு வழுவமைதி.

ஊரன் - மருத நிலத்துத் தலைவன்.

இச்செய்யுள், ஒருவன் அறிவு செயல் முதலியவை அவன் மரபினரையுஞ் சாரும் என்றறிவுறுத்து முகத்தால், அவனை நன்னிலையில் நிறுத்த விரும்பிற்று!

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (20-Jan-23, 9:50 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 15

மேலே