புடைப்பெண்டிர் மக்களும் கீழும் பெருகிக் கீழ்மேலாய் நிற்கும் உலகு – நாலடியார் 368
இன்னிசை வெண்பா
உடைப்பெருஞ் செல்வரும் சான்றோரும் கெட்டுப்
புடைப்பெண்டிர் மக்களும் கீழும் பெருகிக்
கடைக்கால் தலைக்கண்ண தாகிக் குடைக்கால்போற்
கீழ்மேலாய் நிற்கும் உலகு 368
– பன்னெறி, நாலடியார்
பொருளுரை:
தமது பொருளைப் பலர்க்கும் வழங்கும் அன்புரிமையுடைய பெரிய செல்வ வளம் வாய்ந்த இல்லறத்தாரும் ஏனைத் துறவாசிரியரும் வறியராய் நிலைசுருக்கிச் சார்ப்பெண்டிராகிய வேசையரின் மக்களும் ஏனைக் கயவர்களும் செல்வமுடையவர்களாய் நிலைபெருகி, அவ்வாற்றால், குடையினது தண்டு கீழ்மேலாக நிற்பதுபோல் இவ்வுலகம் தலைகீழாய் நிற்கும் இயல்புடையதாய் இருக்கின்றது.
கருத்து:
உலகநிலை கொண்டு மக்களை மதித்தலாகாது.
விளக்கம்:
செல்வம், பிறர்க்கு வழங்குவார்க்கே பயன்தந்து உடைமையாதலின், அவ்வன்புரிமை உடையாரது செல்வம் ‘உடைப்பெருஞ்செல்வம்' எனப்பட்டது அது போல, அறவோர் முதலியோரைப் புறந்தருவாராதல் பற்றி அவர் இல்லறத்தாரெனப்பட்டனர்.
புடைப்பெண்டிர் - பொருள் தருவார் பக்கல் சாரும் பெண்டிர்; இக்குறிப்பினாலும் முன்னர்க் கூறிய செல்வர் இல்லறத் தோன்றல்கள் என்பது பெறப்படும். இஃது உலகியற்கை கூறுமுகத்தான் மெய்ப்பொருளொன்று அறிவுறீ இயது.