புதுப்புனலும் பூங்குழையார் நட்பும் இரண்டும் விதுப்பற நாடின் வேறல்ல – நாலடியார் 370
நேரிசை வெண்பா
புதுப்புனலும் பூங்குழையார் நட்பும் இரண்டும்
விதுப்பற நாடின்வே றல்ல; - புதுப்புனலும்
மாரி அறவே அறுமே, அவரன்பும்
வாரி அறவே அறும் 370
- பன்னெறி, நாலடியார்
பொருளுரை:
புதுநீர்ப் பெருக்கும் அழகிய தோடணிந்த வேசையரின் றொடர்பும் விரைதலின்றி ஆராய்ந்தால் அவை தம் தன்மையில் வேறு வேறு அல்ல;
புது வெள்ளமும் மழை நிற்க நின்றுவிடும்; அவ் விலைமகளிர் அன்பும் பொருள் வருவாய் நீங்க நீங்கிவிடும்.
கருத்து:
பொருட் பெண்டிர், பொருளை மட்டுங் கொண்டு பொருள் கொடுப்பாரைக் கொள்ளாதவராகலின், அவர் தொடர்பு கொள்ளத் தக்கதன்று.
விளக்கம்:
விதுப்பென்றது - உள்ளத்துடிப்பு; ஈண்டு விரைவுக்காயிற்று; பொருள் நிலையற்றதாகலின் அப்பொருள் நோக்கமாக இனியராய் ஒழுகுவாரது அன்பும் நிலையற்றதாய் இன்னாமை பயக்குமென்று ஏதுவின் நிறீஇயினார்.