மிக்க சிறப்பினர் ஆயினும் தாயர்க்கு மக்களுள் பக்கமோ வேறு - பழமொழி நானூறு 260

இன்னிசை வெண்பா

ஒக்கும் வகையான் உடன்பொரும் சூதின்கண்
பக்கத்(து) ஒருவன் ஒருவன்பாற் பட்டிருக்கும்
மிக்க சிறப்பினர் ஆயினும் தாயர்க்கு
மக்களுள் பக்கமோ வேறு. 260

- பழமொழி நானூறு

பொருளுரை:

ஒக்கும்படி சிலருடன் கூடி விளையாடும் சூதாட்டிடத்து பக்கத்திலே இருந்து ஒருவன் ஒருவனைச் சார்ந்து வேண்டியன கூறிக்கொடுப்பான்;

அதுபோல, மக்கள் எல்லோரும் மிகுந்த சிறப்புடையவராகக் கருதப்படுவாரேயாயினும் தாய்மார்களுக்கு மக்களுள்ளும் கல்வியறிவால் மிக்காரிடத்து அன்பு தனிச்சிறப்பு உடையதாக இருக்கும்.

கருத்து:

கல்வி யறிவால் மிக்க மக்களைத் தாயர் பெரிதும் விரும்புவர்.

விளக்கம்:

'பிறப்போ ரன்ன உடன்வயிற்றுள்ளும் சிறப்பின் பாலால் தாயும் மனந் திரியும்' என்பது புறம்.

குழந்தைகளில் வேறுபட்ட அன்பு கோடல் கூடாதாயினும், கல்வியறிவான் மிக்காரிடத்து மிக்க அன்பு செல்லுதல் இயற்கை என்பார், 'தாயர்க்கு' என்றார்.

'தாயர்க்கு மக்களுள் பக்கமோ வேறு' என்பது பழமொழி.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (24-Jan-23, 10:49 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 23

மேலே