மாய்வதன் முன்னே வகைப்பட்ட நல்வினையை ஆய்வின்றிச் செய்யாதார் - பழமொழி நானூறு 261

இன்னிசை வெண்பா

மாய்வதன் முன்னே வகைப்பட்ட நல்வினையை
ஆய்வின்றிச் செய்யாதார் பின்னை வழிநினைந்து
நோய்காண் பொழுதின் அறஞ்செய்வார்க் காணாமை
நாய்காணின் கற்காணா வாறு. 261

- பழமொழி நானூறு

பொருளுரை:

உணர்வு அழிவதன் முன்னே பல திறத்த செயல்களால் வரும் அறங்களை ஆராய்தலின்றிச் செய்யாதவர்கள் பிற்காலத்தில் செய்வோம் என்று நினைத்திருந்து நோய்கள் சூழ்ந்து நின்று தமக்கு இறுதியை ஆராயும்பொழுது தாம் கூறியபடி அறம் செய்வாரைக் காணாதிருத்தல், நாயைக் கண்ட பொழுது கல் கைக்குக் கிடைக்காததற்கு ஒப்பாகும்.

கருத்து:

அறத்தைப் பொருள் பெற்ற பொழுதே ஆராய்தலின்றி உடனே செய்ய வேண்டும்.

விளக்கம்:

உணர்வு அழிந்த பின் வாய் திறந்து சொல்வதற்கும் இயலாதாகையால், 'மாய்வதன் முன்னே' என்றார்.

'ஆய்வு இன்றி' என்றது ஆராய்ந்து காலங் கழியாது உடனே செய்ய வேண்டும் என்பதைக் குறித்தது.

தோன்றுகின்ற உருவம் நாய் என்று கண்ட அளவில், கல் உணர்வு தோன்றாதவாறு போல, அறம் செய்ய நினைத்த பொழுதின்கண் அதற்கேற்பச் செய்வார் இலராய் ஒழிவர்.

'அன்று அறிவாம் என்னாது அறம்செய்க' என்பது திருக்குறள்.

'நாய்காணின் கற்காணா வாறு' என்பது பழமொழி.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (24-Jan-23, 10:52 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 9

மேலே