இனியார்தம் நெஞ்சத்து நோயுரைப்ப அந்நோய் தணியாத உள்ளம் உடையார் - , நாலடியார் 369

நேரிசை வெண்பா
(’னி’ ’ணி’ மெல்லின எதுகை, ழ், ழு உயிர்மெல் ஏறிய எதுகை)

இனியார்தம் நெஞ்சத்து நோயுரைப்ப அந்நோய்
தணியாத உள்ளம் உடையார், - மணிவரன்றி
வீழும் அருவி விறன்மலை நன்னாட!
வாழ்வின் வரைபாய்தல் நன்று 369

- பன்னெறி, நாலடியார்

பொருளுரை:

மணிகளை வாரிக்கொண்டு வீழ்கின்ற அருவிகளையுடைய வென்றி மிக்க மலைகள் அமைந்த சிறந்த நாடனே!

தமக்கு இனியராயிருப்போர் தமது உள்ளத்திலுள்ள கவலையைத் தாமே ஆற்றிக் கொள்ள இயலாமல் எடுத்துச் சொல்ல அக் கவலைக்கு ஏதுவான குறையைத் தீர்த்து அதனைத் தணிவிக்காத இரக்கமற்ற வன்னெஞ்சுடையார் இவ்வுலகில் உயிர் வாழ்தலினும் ஒரு மலையின் மேல் ஏறி வீழ்ந்து உயிர் மாய்த்துக் கொள்ளுதல் நலமாகும்.

கருத்து:

பிறர்க்கு உதவியாய் இராதவர் இருப்பதும் இறப்பதும் ஒன்றே.

விளக்கம்:

இனியாரென்றது, உறவினர் நண்பர் முதலியோர்,

நோய் தணித்தலாவது நோய்க்கு ஏதுவானதைத் தணித்தலென்க.

ஒப்புரவறியாதவர் உலக நடையறியாதவராகலின் உலகில் அவர் இருத்தலும் இல்லாமையும் ஒன்றேயாயின. வரை பாய்தலால் அவ் இழிவு பெறப்படாமை நோக்கி நன்றென்றார்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (24-Jan-23, 10:00 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 10

மேலே