498 தந்தையைக் கொல்லவும் பொதுமகள் சாற்றுவள் – கணிகையரியல்பு 25
அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(காய் 4 / மா தேமா)
தையலில்லம் புகும்போதென் சுதன்குரலைக் கேட்டொதுங்கித்
..தாழ்வா ரத்திற்
பையவொன்றிச் செவிகொடுத்தேன் பாலனைப்பார்த்(து) அக்கோதை
..பணமீ யென்றாள்
ஐயனிறந் திடிலெல்லா முனதென்றா னவன்தூங்கும்
..சமையம் பார்த்தோர்
சையமெடுத் தவன்றலைமேற் போட்டிடுவாய் போடுமுன்நான்
..தழுவே னென்றாள். 25
– கணிகையரியல்பு, நீதிநூல்
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்
பொருளுரை:
பொதுமகள் வீட்டிற்குள் நுழையும்போது என் மகன் குரலைக் கேட்டேன். சற்று ஒதுங்கித் தாழ்வாரத்தில் நின்று ஒற்றுக் கேட்டேன். அப்போது பொதுமகள் என் மகனைப் பார்த்துப் பணம் கொடு என்றாள்.
அவன், `என் தந்தை இறந்து விட்டால் எல்லாப் பொருளும் உன்னுடையதுதான் என்றான். அவள், `உன் தந்தை தூங்கும் போது அவன் தலையில் பெருங்கல்லைப் போட்டுக் கொன்றுவிடு; அதற்கு முன் உன்னை நான் சேரேன் என்றாள்.
சுதன் - மகன். குரல் - பேச்சொலி. சையம் - கல்.