உங்களுக்காக ஒரு கடிதம் 36
ஹலோ..... வணக்கம். எல்லா நன்மைகளும், இன்பங்களும், வளங்களும் வாழ்வில் பெருகட்டும். சரி நாம் கதையை தொடருவோம். நம் பிள்ளைகள் கஷ்டப்படக்கூடாதென்று நாம் பல காரியங்கள் செய்கின்றோம். நாம் பட்ட துயரங்கள் நம் பிள்ளைகளுக்கு நேரிடக்கூடாதென்கிற நல்ல எண்ணம்தான். வாழ்த்துகிறேன்.வணங்குகிறேன். சில சமயம் அது எதிர்மறையாய் பலன் கொடுக்கிறதே. என்ன செய்ய? அதுவே பிள்ளைகளுக்கு சாதகமாய் மாறி பல பாதகங்கள் ஏற்படுத்தி விடுகிறதே! உதாரணத்திற்கு 'பாக்கட் மணி' என்கிற ஒன்றை எடுத்துக்கொள்ளலாம். தேவைக்கு அதிகமாக கொடுத்து, அவர்கள் கையில் தாராளமாய் செலவு செய்ய பழக்கப் படுத்துவது...யார் குற்றம்? பல சமயம் பணத்தின் அருமையை உணராமல், பல பழக்கங்களுக்கு அடிமையாகி, வாழ்வை தொலைத்துவிடும் அவல நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். எல்லாம் கை மீறியபின், மானம் இழந்து...மரியாதை இழந்து...ஒரு கேவலமான சூழ்நிலை உருவான பிறகு வாயிலும் வயிற்றிலும் அடித்து கொள்வதினால் என்ன பயன்? உயிரை மாய்த்துக்கொள்வதினால் யாருக்கு என்ன லாபம்?
குற்றம் முழுவதும் பெற்றோர் மேல்தானா? இல்லை. பிள்ளைகளே உங்களுக்கும் அதில் பங்கு உண்டு. உங்கள் வயது...இள வயது. அனுபவிக்க வேண்டிய வயது, எல்லாம் ஒத்துக் கொள்கிறேன். +2 வரை கட்டப் பட்டிருந்த தளைகளெல்லாம் அறுத்தெறிந்து விட்டு சுதந்தர காற்றை சுவாசிக்கும் வேளை...இயல்பாய் உடலில் ஏற்படும், ஹார்மோன்களின் திரு விளையாடல்களின் ஒரு முகமான காந்த ஈர்ப்பு...எதிர்பாலரைத்தான் சொல்கிறேன்...அதனால் உண்டாகும் காதல்... சீண்டல்கள்....ஊடல்கள்...கூடல்கள்...கமிட்மென்ட்கள்...ப்ரேக்கப்கள்... அதன் வேகம் அதிகமாக இருப்பதால் கவனச் சிதறல்கள்...வந்த காரியம் மறந்து, கொள்கை மறந்து...நோக்கத்தை ஒருமுகப்படுத்ததில் குறைபாடுகள்... பாடம் புரிதலில்...வருகை குறைந்து ( attendance ), செயல் திறன் குறைந்து, வாங்கும் மார்க்கும் குறைந்து...தேர்வில் தோல்வியும் அடைந்து...வகுப்புத் தோழர்களையும் தொலைத்து விட்டு...நம்மைவிட இளைய கூட்டத்தில் சேர்ந்தும் சேராமல், ஒட்டியும் ஒட்டாமல் மீதம் இருக்கும் நாட்களில் தனிமை படுத்தப் பட்டு, மன அழுத்தத்தினால் மேலும் கவனம் சிதறி..சீர்கெட்டு வாழ்வில் பின்நோக்கித் தள்ளப்பட்டு...இதற்கெல்லாம் மகுடம் சூட்டியதுபோல் மற்றொரு கொடுமை என்னவென்றால் இதையெல்லாம், குறிப்பாக தோல்விகளைத் தாங்கும் மனோபக்குவம், சகிப்புத்தன்மை சிறிதும் இல்லாமல் உயிரை மாய்த்துக் கொள்ளும் அளவுக்கு தள்ளப்படுதலுக்கு யார் காரணம் ? பெற்றோரா?இல்லை நீங்களா? எண்ணிப்பாருங்கள். கால்பந்தாட்டத்தில் மொத்தம் 11 பேர், எதிர் அணியிலும் 11 பேர்,அத்தனை பேரும் விளையாட்டில் வல்லுநர்கள்...விளையாட்டின் நெளிவு சுளிவுகளில் கரை கண்டவர்கள். அத்தனை பேரையும் ஏமாற்றி...தடைகளெல்லாம் மீறி...கோல்கீப்பரையும் ஏமாற்றி இலக்கை அதுதான் கோலை அடித்தால்தான்...சந்தோஷமும்...பாராட்டுதலும்....பரிசுகளும்... வெற்றி கோப்பையும் கிட்டுமெத்தவிர, பாதியில் சுணங்கிவிட்டாலோ...தடங்கல்களை ...திசை திருப்புதல்களை...கவன ஈர்ப்புகளில் மயங்கி...நிதானம் இழந்து கொண்ட கொள்கைகளில் ஊசலாடிவிட்டாலோ தோல்விதானே கிட்டும். இது உங்கள் விளையாட்டு. உங்கள் வாழ்க்கை. நீங்கள்தானே விளையாட...போராட...வேண்டும். எண்ணிப் பாருங்கள். நீங்கள் ஒன்றும் சிறு குழந்தைகள் இல்லை. ஊட்டிவிடுவதற்கு...எங்களால் வழிகாட்டத்தான் முடியும். எங்கள் வாழ்வில் நாங்கள் செய்த தவறுகளை உங்களுக்கு சொல்லத்தான் முடியும். உங்களுக்குத்தான் அட்வைஸ் என்றாலே பிடிப்பத்தில்லையே. நட்ப்பாய் சொன்னாலும் கிண்டல் செய்து எங்களை அடக்கி விடுகிறீர்கள். என்ன செய்வது? மெல்லவும் முடியாமல்...முழுங்கவும் முடியாமல் நாங்கள் படும் அவஸ்தைகள்...சொல்லில் சொல்ல முடியாது. எழுத்திலும் வடிக்க முடியாது. புரிந்து கொண்டால் சரி. நீங்கள் வெற்றி அடைந்து..அந்த வெற்றியில் எங்களையும் பங்கேற்க வைத்தால் சரி. என்னதான் வார்த்தைக்குச் சொன்னாலும்...அந்த வெற்றியின் முழு பலனும் உங்களுக்கே...உங்களுக்கே சொந்தம். எங்களுக்கு அல்ப சந்தோஷம்தான். எங்களுக்கு அதுவே போதும். வேறொன்றும் எங்களுக்குத் தேவை இல்லை.
தொடரும்.

