உங்களுக்காக ஒரு கடிதம் 35

ஹாய் ப்ரோ.. நீ.....................................ண்ட இடைவெளி விழுந்து விட்டது. என்ன செய்வது? நாம் கடைசியாக சந்தித்தது போன வருடம் நவம்பர் மாதம் கடைசியில். பாலன் ஏசு பிறந்து கிறிஸ்த்துமசும் கொண்டாடி விட்டோம். தொடர்ந்து 2023 புதிய வருடம் கொண்டாடி, தை மகள் பிறந்து கையில் பசுநெய் வழியவழிய சர்க்கரை பொங்கலுடன் செங்கரும்பையும் சுவைத்து விட்டோம். லேட்டாக சொன்னாலும் பரவாயில்லை. உங்கள் எல்லோருக்கும் என்னுடைய இனிய புத்தாண்டு மற்றும் பொங்கல் நல் வாழ்த்துக்கள். இப்புத்தாண்டு எல்லோர் வாழ்விலும் சந்தோஷங்களும், மன நிம்மதியையும், உடல் ஆரோக்கியமும் நிறைய என்னுடைய பிராத்தனைகள். சிரித்துக்கொண்டே இருங்கள். பிறர் சிரிக்கும்படி வாழ்ந்திடாமல்... சிந்தித்து வாழ்வில் ஒவ்வொரு அடியும் அளந்தும்.... ஜாக்கிரதையாயும் எடுத்து வைத்து முன்னேறி வெற்றி கொடியை பறக்க விடவேண்டும் என்பது என் கனா...ஏன் லட்சியமும்கூட. சரி விஷயத்துக்கு வருவோம். வெறும் வாயில் வடை சுடாமல் வெற்றி வாகை சூடிட தினம் உழைப்போம். வியர்வை சிந்துவோம். ALL THE BEST .
போன கடிதத்தில் "இனிமேல்தானே காளியின் ஆட்டத்தைப் பார்க்கப் போறீங்க....." என்று ஒவ்வொரு மாணவனும் மருத்துவ கல்லூரி கேட்டை திறந்து... வலதுகாலை எடுத்து வைத்து கல்லூரியில் நுழைகிறார்கள். நுழைந்த பின் என்னவெல்லாம் நடக்கிறது என்பதனை இனி காணலாம். நுழைந்து ஆறு மாதம்... இல்லையில்லை ஒரு மூன்று மாதம்...ம்ம்ம் ஒரு மாதத்திற்குள் இந்த பூனையும் பால் குடிக்குமா? என்று அமைதியின் பிறப்பிடமாய் இருந்த இந்த பூனைகள் புலியாய் மாறி வேட்டை ஆட துவங்கி விடுகிறார்களே...என்ன கொடுமை சார் இது..? எல்லோரையும் அப்படி சொல்லிவிட முடியாது. பெரும்பாலும் நடக்கிற கூத்தைத்தான் எழுதப்போகிறேன். இதில் பெண்பிள்ளைகளும் அடக்கம். பள்ளிநாட்களில் கட்டப்பட்டிருந்த விலங்குகள் இங்கே துண்டாடப்பட்டு, அமுக்கி வைக்கப்பட்டிருந்த மன அழுத்தங்கள், மன உளைச்சல்களிருந்து ' விடுதலை... விடுதலை" என்று ஒரேயடியாய் ரிலாக்ஸ் செய்து விடுகிறார்கள். எரிமலையாய் வெடித்துவிடுகிறார்கள். கொடுமை என்னவென்றால் பத்தாவதிலும், +2 விலும் outstanding மார்க்ஸ் வாங்கி கெத்தாக மருத்துவ கல்லூரியில் நுழைந்து தன் சுயமிழந்து, படிப்பிலும்...வாழ்விலும் தோல்வியடைந்து இளமையை... எதிர்காலத்தை தொலைத்துவிட்ட கூட்டத்தை பற்றித்தான் இந்த வேதனையான பதிவு.
குறிப்பாக பெண்பிள்ளைகளைப் பற்றி என்ன எழுதுவதென்றே தெரியவில்லை. நுழைந்த போது இருந்த பயம்...தயக்கம் எல்லாம் மாறி துணிவும் துணிச்சலும் எக்குத்தப்பாய் எகிறி... எதையும் செய்துவிட தைரியம் கூடி வாழ்வை அடகுவைத்து உயிரையும் விட்டுவிடும் நிலை கண்டு கண்ணீருடனும்...குருதியும் கலந்த ஒரு ஈரப் பதிவுதான் இது. எல்லாவற்றையும் எழுதிவிட நெஞ்சும் கையும் துடிக்கிறது.ஆனால் உண்மை பலசமயம் வேறுமாதிரி புரிந்துகொள்ளப்பட்டு வேறுவிதமான முடிவுகள் கொடுத்துவிடுமே என்கிற தயக்கம்தான் கொஞ்சம் தடுக்கிறது. அதுமட்டுமல்லாமல் மற்றவரின் தனிப்பட்ட வாழ்வியலை எழுத உரிமை எங்கிருக்கிறது? அது தனிப்பட்ட முறையில் இருக்கும்வரை முடியாது அதுவே அது சமுதாயத்தை பாதிக்கும் போது எழுதுவதில் தவறில்லை என்று எண்ணுகிறேன். அதற்கும் ஒரு வரைமுறை உண்டல்லவா? அதனால் அந்த கோட்டிற்குள் இருந்து எழுதிவிட முயலுகிறேன். ஏதேனும் தவறிருந்தால் இல்லை யாரையாவது பாதிப்புக்குள்ளாகிறதென்றால் இப்போதே என்னை மன்னித்து விடுங்கள். இது இளைய சமுதாயத்தை திருத்தும் நோக்கமல்ல. அவர்களை எப்படி செம்மை படுத்துவது? இல்லையில்லை அவர்களை நல்ல வழியில் திருப்புவது? என்கிற முயற்சியின் முதற் படிதான். சரி .அவர்களையே குறை கூறினால் எப்படி? பெரியவர்களாகிய நாம் தப்பே செய்ததில்லையா?.... செய்வதில்லையா?
தொடரும்

எழுதியவர் : ஜீவன் (மகேந்திரன்) (24-Jan-23, 7:38 pm)
சேர்த்தது : ஜீவன்
பார்வை : 21

மேலே