உங்கள் சேவையே எங்கள் வியர்வை

உங்கள் சேவையே எங்கள் வியர்வை

கணினி எல்லா இடங்களிலும் தன் ஆட்சியை நிலைநாட்டி எங்கும் எதிலும் ஒரு சுலபமான வழியை நமக்கு கொடுத்துள்ளது.
அறை அறையாக கோப்புகள் அதில் அச்சடிச்ச காகிதங்கள் அதை தாங்கும் கிளிப்புகள் அல்லது சிறு நாடாக்கள்,வெளியே பேனா இங்கில் எழுதிய வாக்கியமும் தேதிகளும் ஒரு மூலையில் தொடங்கி மறுமூலை வரை நிற்கும் உயர்ந்த மர ஷெல்ப்.
அதை எடுப்பதற்கு இரண்டு நீல சட்டையில் உலாவரும் மனிதர்கள். எதை கேட்டாலும் அவர்கள் அதைத் தேடி கொண்டு வருவதற்குள் நிமிடங்கள் மணி நேரங்களாகி,வரிசையில் நிற்கும் எல்லோரும் பொறுமை இழந்து சொற்களில் சூடு தெறிக்க விவாதங்கள் என்ற நிலை. கணினி வந்த பின் இவை யாவையும் நீங்கி ஒரு சில நொடிகளில் கண் எதிரே உள்ள திரையில் தெரியும் விந்தை மிக மகிழ்ச்சியானது தான்.
அரசாங்க அலுவலகங்களில் பல ஆண்டுகள் வேலை செய்து அந்த உழைப்பால் உயர்ந்தவர்கள் வயதில் சிறிது முதுமை அடைந்தவர்கள் மீண்டும் பள்ளி செல்வதுபோல் கணினி வேலை செய்வதைப் படித்து அதன் செயல் திறமைகளைக் கண்டு ஆனந்தம் அடைந்து அதன் முன்னால் உட்கார்ந்து அதனை செயல் படுத்தும் வேளை, அவர்கள் முகத்தில் ஒரு பெருமிதம் தானே வருவதை காண முடிகிறது. தங்கள் மகன், மகள் சிலநேரங்களில் மனைவி மற்றும் பிற குழந்தைகளிடம் அவர்கள் வேலை முடிந்து வந்தவுடன் அன்று அலுவலகத்தில் நடந்ததை சிறு பிள்ளை போல் கூறி கொள்ளுவதை என்ன என்று கூறுவது.சோர்வுடன் வேலை முடிந்து வருபவர்களை இன்று குளுகுளு அறையில் இருந்து கொண்டு சுலபமாக பல வேலைகளை நிமிடத்தில் செய்வபர்களாக கணினி மாற்றி இவர்களை பொறுப்புள்ளவர்களாகவும் ஆக்கி உள்ளது.
இந்த இன்பமான திருப்பம் ஒரு புறம் இருக்க சில அரசு பணியாட்கள் இக்கணினி முன் இருந்து கொண்டு மீண்டும் அந்த பழைய நாட்களில் இருக்கும் கோபமும் எரிச்சலும் கொண்டு செயல் படுவதையும் பார்க்க மிகக் கொடுமையாக இருக்கிறது.
ஒரு பொதுநல சேவை நிறுவனத்தில் நாம் காலடி எடுத்து வைத்து அங்கு நடப்பவைகளை பார்க்கலாம் வாருங்கள்
நண்பகல் 12:45 மணி ஆனவுடன், அடுத்த வினாடி சக ஆசிரியரின் உதவியுடன் மோட்டார் வாகனத்தில் ஆயுள் காப்பீட்டு அலுவலகத்தின் அறைக்குள் நுழைந்து கணினியில் எதையோ பார்த்துக் கொண்டிருந்த பெண்மணிக்கு முன்னால் வந்து நின்ற போது சரியாக மதியம் 12 50.
நவீன மயமான உலக சூழலில் அதற்கேற்றார் போல் தன்னை மாற்றிக்கொள்ள தயாராக இல்லாதவர் அந்த பெண்மணி. குளிரூட்டிய அறையில் கணினிக்கு முன்னால் மூக்கு கண்ணாடியோடு வேலை பார்த்துக்கொண்டிருந்த அந்த பெண்மணிக்கு முன்னால் போய் நின்றேன்.
அவருக்கு முன்னால் நின்றதை பார்த்த பிறகும், எனக்கு என்னவேண்டும் என்று என்னிடம் எதுவும் கேட்கவில்லை
கணினியில் எதையோ உற்று பார்த்துக்கொண்டு கொண்டு ,தான் சுறுசுறுப்பாய் இருப்பது போல் பாவனை செய்து கொண்டார்.
’மேடம்’ என்றேன். தலையை தூக்கி என்னை பார்த்து விட்டு மீண்டும் கண்களை கணினிக்கு மாற்றினார்.
மௌனமாக நான் சில நிமிடங்கள் நின்றேன் .. கணினியில் அவரது பார்வை இருக்கும் வேளையில்,என் கையில் இருந்த வெள்ளைத் தாளை நீட்டி’ இந்த பாலிசியின் ஸ்டேட்மெண்ட் வேண்டும்’ என்றேன்.
தலையைக் கொஞ்சம் நிமிர்த்தி இடது கையினால் நான் கொடுத்த ரசீதினைப் பெற்று ஒரு ஓரமாக வைத்துவிட்டு, மீண்டும் அவரது தேடலில் தன் கவனத்தைச் செலுத்த ஆரம்பித்தார். தற்போது மணி 12 57.
ஒரு மணிக்குமதிய உணவு. அதற்கு இன்னும் மூன்று நிமிடம் தான் மிச்சம். நான் வந்த நேரத்தில் என்ன என்று கேட்டிருந்தால் ஒரு நிமிடத்தில் எனது வேலை முடிந்து இருக்கும். அவரின் சுறுசுறுப்பற்ற தன்மையைப் பொறுத்து கொள்ளாமல் மீண்டும் மேடம் ஸ்டேட்மெண்ட் வேணும் என்றேன்.
அந்த பெண்மணிக்கு கோபம் வந்து விட்டது. ’இப்ப என்ன டைம்’? ஒரு மணி .சாப்பாட்டு நேரம். இப்ப முடியாது. இரண்டரை மணிக்கு வாங்க’ .என்று அவர் கணினியிடம் காட்ட முடியாத கோபத்தை என் மீது காட்டினார்

கொஞ்சமும் நிதானம் இழக்காமல், அமைதியாக அவரிடம் ”நான் 12 அம்பத்தி மூணு எல்லாம் இங்கே வந்துட்டேன். ஆனா நீங்க தான் என்னுடைய நேரத்தை வீணாக்கிட்டிங்க. அது உங்க தப்பு. .”என்று நான் எதிர்த்துப் பேசிய உடன் பட படவென அந்த பெண்மணி பேச ஆரம்பித்துவிட்டார்.
பக்கத்தில் இருந்தவர் சூழலைப் புரிந்துகொண்டு’ இங்க வாப்பா’ என்று அழைத்து என்ன என்றார். விளக்கி சொன்னேன். அடுத்த வினாடியே என் பாலிசி நம்பரை கம்ப்யூட்டரில் தட்டி ஒரு பிரிண்ட் அவுட் எடுத்து, அதில் கையெழுத்திட்டு என்னிடம் நீட்டினார்

அதை பெற்றுக்கொண்டு நான் அப்போது அங்கு தொங்கவிடப்பட்ட கடிகாரத்தைப் பார்த்தேன் மணி ஒன்று

அந்த பெண் மணி இன்னும் அந்த கணினியில் எதையோ தேடிக்கொண்டு இருந்தார்

என்ன தேடுகிறார் என்பது அவருக்கு சரியாக தெரியுமா என்பது எனக்குத் தெரியாது
தனது நாட்கள் எல்லாம் பேப்பர் கோப்பு இவைகளுடன் போராடிய இந்த பெண்மணிக்கு கணினியைக் கற்றுக் கொடுத்து குளிர் அறையில் அவர்களை உட்காரவைத்து வேலை செய்வதை மிகவும் சுலபமாக்கி வரும் வாடிக்கையாளர்களுக்கு நிமிடத்தில் உதவி அளிக்க செலவுகள் செய்து அதை உள்ளிலும் வெளியிலும் தங்கள் அலுவகத்தில் வெளிப்படுத்த எவ்வளவு சுவரொட்டிகள், பேனர்கள். உங்கள் சேவையே எங்கள் வியர்வை என அலுவலகத்தின் குறிக்கோளை எழுதி வைத்திருக்கும் கதவை திறந்துகொண்டு சிரித்தபடி வெளியேறினேன்.

எழுதியவர் : கே என் ராம் (22-Jan-23, 10:59 pm)
சேர்த்தது : கே என் ராம்
பார்வை : 53

மேலே