சும்மா வந்ததல்ல சுதந்திரம்
அடிமை சங்கிலியால்
கரங்கள் கட்டுண்டபோதும்
ஆங்கிலேய பரங்கியரால்
உடல் வெட்டுண்டபோதும்
அன்னைபூமியின் விடுதலையொன்றே
கனவென்று நாளும்
அகிம்சைவழி நின்ற
அறப்போராட்டத்தின் வெற்றியே சுதந்திரம்!
தளவாடங்கள் நூறுண்டு,
தாக்கியழிக்க பீரங்கி படையுண்டு அவரிடம்
தன்மானமும், மண்மானமும் கொண்டு
வெகுண்ட தளவான்கள் நம்மிடம்
தாலிக்கொடியின் சொந்தமும்,
தொப்புள்கொடியின் பந்தமும்
தாய்நாட்டு மணிக்கொடியின்
விடுதலைக்கு பின்தான்
தம்மட்டம் அடித்து
தலைப்பட்ட மறவரின் கூட்டத்தால்
தவிடுபொடி ஆனது
வெள்ளையனின் வெறித்தனம்
உலகாண்ட சர்வாதிகாரம்
உடைப்பட்டது ஓரிடமென்றால்
உரக்க சொல்லுங்கள்! - அது
இந்திய விடுதலை போராட்டம் என்று.
இரவில் வாங்கியதை
இரவல் தந்துவிட்டு
இல்லாத ஒன்றுக்கு
இத்தனை விழாக்கள் எதற்கு?
இன்னுயிர் பலர் தந்து
பெற்றிட்ட சுகந்திரம்
இல்லாமல் போனதை
எதுவென்று நாம் உரைப்பது?
ஊழலும், லஞ்சமும்
உச்சாணி ஏறி நிற்கையிலே
உயிர்த்தியாகம் செய்த
உன்னத காந்திய ஆத்மாக்களின்
ஊமைமொழி சொல்கிறது
"சும்மா வந்ததல்ல சுதந்திரம்" என்று.