யாவும் நலமே

உட்சாணியில் ஏற்றிவிடும்
அட்சானி ஆசான்கள் அமைந்தால்
உயருள்ளல் உள்ளாடும்
மாணவனுக்கு யாவும் நலமே!

கையூட்டு கறைப்படியா தலைவர்கள்
கட்சிதோறும் அமைந்தால்
கரையான்கள் மொய்க்காத
கண்ணிய நாட்டில் யாவும் நலமே!

பொதுநல சேவைசெய்யும்
பொறுப்பான அரசு மருத்துவர்கள் கொண்டால்
பொல்லாத நோய்களும் இல்லாமல்
போகும் தேசத்தில் யாவும் நலமே!

வலியோரை வாழ்வித்து
வால்பிடிக்காமல், எளியோர்க்கும் இறங்கும்
ஏழைபங்காளனாய் வழக்குறைஞ்சர் வாய்க்கப்பட்டால்
வாழும் நாளில் யாவும் நலமே!

வீதிகளில் தோரணம்கட்டும் விதிமீறல்கள்
சாலைகளில் சர்வசாதாரண கொலைகள்
ஊரயெங்கும் வழிப்பறிகள்
உளவுத்துறையும், காவல்துறையும்
உயிர்கொள்ளும் என்றால் யாவும் நலமே!

அத்தனை பழங்களும்
சொத்தைகள்தான் எண்ணும்போது
அத்திப்பழத்தை குற்றம்காணும்
ஆணவப்போக்கு நீங்கினால் யாவும் நலமே!

கூளங்கள் மத்தளம்கொட்டும் குப்பைமனதை -
ஜாலங்கள்காட்டி சுத்தம்செய்யும்
நிதர்சன ஆன்மீகம் அமைந்தால் யாவும் நலமே!

ஊனங்கள் நீக்கி ஞானங்கள் குடிக்கொள்ளும்
மாந்தரை மண்ணில் தருவானென்றால்
மதங்களும், மார்கங்களும் பூஜைக்கொள்ளும்
ஆண்டவனால் பூமியில் யாவும் நலமே!

எழுதியவர் : நா. தியாகராஜன் ஈஞ்சம்பாக்கம், சென்னை (31-Aug-24, 12:23 pm)
சேர்த்தது : TPRakshitha
பார்வை : 28

மேலே