ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்
நந்தவனத்து ஆண்டியாய்
நாளும் நர்த்தனங்கள் பயிலுகிறேன்!
ஈன்றவள் ஒருபக்கம்,
இணைத்தவள் மறுபக்கம்
இல்லற கூத்தில்
இடிதாங்கி நான் மட்டும்!!
உமையொரு பாகம் தந்து,
ஒரு பாகமேனும் கொண்டான் ஈசன்
உடல், பொருள், ஆவி
அத்தனையும் தந்தபின்னும்
ஊசலாடுகிறேன் நான்!
ஈன்றவளின் குரலுக்கு செவிசாய்த்தால்
இயலாத "அம்மா பிள்ளை",
இவனுக்கு நான் எதற்கு?
என்கிறாள் மனைவி
இல்லாள் சொல்லில் நியாயம் கண்டால்
இவனோ "பொண்டாட்டி தாசன்"
ஆகிவிட்டான் என்கிறாள் தாய்
ஊர் இரண்டுபட்டால்
கூத்தாடிக்கு கொண்டாட்டமாம்
இங்கே
கூத்தாடி படுகின்ற திண்டாட்டம்
உரியவர்கள் அறிவதுதான் எந்நாளோ?