221 குடும்பம் முற்றும் கோறலாம் தலைவன் கோறல் – கொலை 8
கலிவிருத்தம்
(விளம் விளம் மா கூவிளம்)
(மாச் சீரின் இறுதியில் குறிலோ, குறில்+ஒற்றோ தான் வரும். நெடில், நெடில்+ஒற்று வராது)
பத்தினி சேயரும் பரிச னங்களும்
தத்தம நிலைகெடத் தலைவ னைச்சமன்
ஒத்தவ னியிற்கொல லொருவன் றன்னையன்(று)
அத்தனை பேரையு மடுதல் போலுமே. 8
– கொலை, நீதிநூல்
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்
பொருளுரை:
”ஒருவர்தம் மனைவி, பிள்ளைகள், உறவினர்கள் ஆகியோரின் வாழ்க்கை நிலை கெட்டு அழியும்படி அக்குடும்பத்தலைவனை யமனைப் போன்று ஒருவன் கொன்றால், அக்கொலை அத்தலைவனை மட்டுமன்று, அக்குடும்பத்தைச் சேர்ந்த அத்தனை பேரையும் கொன்றதற்கு ஒப்பாகும்” என்கிறார் இப்பாடலாசிரியர்.
பத்தினி - மனைவி. சேயர் - பிள்ளைகள். பரிசனம் - உறவினர்கள். சமன் - இயமன்.