274 பாத்துண்டலும் பலர்க்கீதலும் இல்லான்பொன் பாழே – கடும்பற்று 3
கலிவிருத்தம்
(விளம் விளம் மா கூவிளம்)
(மாச் சீரின் இறுதியில் குறிலோ, குறில் ஒற்றோ தான் வரும். நெடில், நெடில் ஒற்று வராது)
(விளம் வருமிடங்களில் மாங்காய்ச்சீர் வரலாம்)
பொலிவளந் தங்கிய புவியிற் றானுண்டும்
பலிபிறர்க் கிட்டுமே பயன்றுவ் வான்பொருள்
வலியிலாப் பேடிகை வாள்கொல் ஆணென
அலியினை மேவிய அரம்பை யேகொலோ. 3
– கடும்பற்று, நீதிநூல் - மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்
பொருளுரை:
”மிகுந்த செழிப்புள்ள உலகத்தில் தன் வயிறு பசியாற உண்டும் வறியவர்கட்குக் கொடுத்தும் பயன் அடையாதவன் செல்வம், ஆண்மையில்லாத பேடி கையில் வாள் வைத்துள்ள ஆண் போலவும், அலியின் தன்மையை உடைய அழகிய பெண் போலவும் என்றும்” அப்பொருளினால் எந்தப் பயனும் இல்லை என்றும் கூறுகிறார் இப்பாடலாசிரியர்.
பொலி - செழிப்பு. பலி - பிச்சை. பயன் துவ்வான் - பயன் அடையாதவன்,
அரம்பை - அழகிய பெண்.