275 பயன்பெறாச் செல்வன் சுமைதாங்கிக் கல்லிற்கும் கழுதைக்கும் ஒப்பு – கடும்பற்று 4
கலிவிருத்தம்
(விளம் விளம் மா கூவிளம்)
(மாச் சீரின் இறுதியில் குறிலோ, குறில்+ஒற்றோ தான் வரும். நெடில், நெடில்+ஒற்று வராது)
(விளம் வருமிடங்களில் மாங்காய்ச்சீர் வரலாம்)
நித்திய மனுபவி யாது நீணிதி
பத்திரஞ் செய்குவோன் பாரந் தாங்கவூர்
மத்தியிற் புதைத்தகல் மாசில் தூசர்க்கு
வத்திரஞ் சுமக்கும்வா லேய மொப்பனே. 4
– கடும்பற்று, நீதிநூல்
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்
பொருளுரை:
”நாள்தோறும் நல்ல முறையாக அனுபவிக்காமல் பெரும் செல்வத்தைச் சேர்த்துப் பத்திரமாகக் காப்பவன், சுமையைத் தாங்க ஊர் நடுவில் நாட்டிய சுமைதாங்கிக் கல்லிற்கும், அழுக்கில்லாமல் துணிகளை வெளுக்கும் வண்ணார்க்கு ஆடை சுமக்கும் கழுதைக்கும் ஒப்பாவான்” என்கிறார் இப்பாடலாசிரியர்.
நித்தியம் - நாள்தோறும். அனுபவியாது - அனுபவிக்காமல்.
தூசர் - வண்ணார். வாலேயம் – கழுதை.