575 பகரொணா இன்பவளம் பத்தர்க்கு அருள்வன் - தெய்வத்தன்மையும் வாழ்த்தும் 33

அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)
(விளம் வருமிடத்தில் மாங்காய்ச்சீர் அருகி வரும்)

நலமிலா நரர்க்குத் தேவன்
..நல்கிய சராச ரங்கள்
பலவள முளவே லன்னான்
..பத்தர்கள் பெறும்பே ரின்பத்
தலவள மெற்றோ பாவச்
..சலதியுண் மூழ்கு வோர்சார்
புலவினோ யெத்தன் மைத்தோ
..புந்தியே சிந்தி நீயே. 33

- தெய்வத்தன்மையும் வாழ்த்தும், நீதிநூல்
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

மனமே! நன்மை ஒருசிறிதுமில்லாத மக்கட்கு நன்மையே பிழம்பாய்த் திகழும் ஆண்டவன், இவ்வுலகத்தில் நிற்பனவும் நடப்பனவும் ஆகிய பல்வேறு உயிர்த் துணைகளையும், உலகியற் பல வளங்களையும் ஆக்கி அருளினன்.

எல்லா நலமும் ஓருருவாய்த் திகழ்ந்து ஆண்டவன் திருவடிப்பற்றே உயிராய்க்கொண்டு வாழும் அடியவர்கட்கு அவனருளும் செருக்கறுப்பான் எய்தும் வானோர்க்கு உயர்ந்த உலகமாகிய பேரின்பப் பெருவீடாம் புக்கில் எத்துணை வளம் நிறைந்ததென்று எவராலும் வரையறுத்துச் சொல்லமுடியாது.

கருதவும் கரையவும் முடியாத பெருந்தீமைகளைச் செய்வோர் சென்று புகுந்து துன்புறும் இருளுலகாகிய நிரயமும் எத்துணைக் கொடியதோ? ஓர்ந்து உய்யுநெறி கடைப்பிடிப்பாயாக.

நரர் - மக்கள். தேவன் - ஆண்டவன், சரம் - நடப்பன. அசரம் - உற்பன. தலம் - உலகம். சலதி - கடல்.
சிந்தி - சிந்தனை செய், புந்தி - மனம். புக்கில் - பேரின்ப வீடு. எற்று - எத்தன்மைத்து.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (29-Jan-23, 8:50 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 9

மேலே