576 நல்லாரை நீக்கின் நண்ணும் பழியே - தெய்வத்தன்மையும் வாழ்த்தும் 34

அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)
(விளம் வருமிடத்தில் மாங்காய்ச்சீர் அருகி வரும்)

ஆலயந் தன்பால் வாழும்
..அரசொரீஇ யவற்கொன் னாரைச்
சாலவே யேற்றல் போலத்
..தனக்குனைப் பீட மாச்செய்
மூலகா ரணனை நீத்திங்(கு)
..அகங்கார முதற்பா வங்கள்
ஏலநீ யுன்கண் ஏற்றாய்
..இதயமே சிதைவை நீயே. 34

- தெய்வத்தன்மையும் வாழ்த்தும், நீதிநூல்
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

மனமே! சிறந்த இருக்கையாகிய திருக்கோவில், தன்னிடம் வாழும் முதல்வனாகிய வேந்தை நீக்கி அவற்குப் பகைவராகிய தீயோர்களைச் சேர்த்துத் துன்புற்றுக் கெட்டொழியும்.

அதுபோல், நீயும் எவற்றுக்கும் காரணமாய் என்றுமுள்ள இறவாப் பிறவா இறைவனை நீக்கி, செருக்கு சினம் சிறுமை முதலிய தீமைகளைச் சேர்த்துக் கொண்டிருக்கிறாய். விரைவில் கெட்டொழிந்து துன்புறுவாய். ஏன்? உன்னைத் தனக்கிருப்பிடமாகவே ஆண்டவன் அமைத்தனன்.

ஆலயம் - திருக்கோவில். ஒரீஇ - நீக்கி. ஒன்னார் - பகைவர். பீடம் - இருக்கை. நீத்து - விலக்கி.
சிதைவை - கெடுவை.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (29-Jan-23, 8:55 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 12

சிறந்த கட்டுரைகள்

மேலே