610 உடைமையிற் பங்கில் பிறப்பை ஓம்பல் பிறப்பாண் கடனே - உடன் பிறந்தார் இயல்பு 3
கலிவிருத்தம்
(கருவிளங்காய் விளம் காய் விளம்)
உடன்பிறந்த சோதரிக்(கு) ஒத்தபாக மிலைபிறப்
பிடந்துறந்து நாளையோர் ஏழையிற் கிழத்தியாய்த்
தொடர்ந்துசெல்வள் ஆதலாற் றொடர்புறஞ் சகோதரர்
அடர்ந்தவன்பொ டவளைநன் காதரிக்க வேண்டுமால். 3
- உடன் பிறந்தார் இயல்பு
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்
பொருளுரை:
உழுவலன்புசேர் உடன்பிறந்தாளைத் தம்மினும் சிறப்பாக அன்புடன் பேணி வரவேண்டும்.
ஏனென்றால்? முறையற்ற இந்துச் சட்டப்படி அவளுக்குத் தந்தை உடைமையில் ஆண் பாலாரைப் போல் பங்கு கிடையாது.
பெண்பாலார்க்குப் பங்கில்லையென்னும் பிழை வழக்கிருப்பதால் அவள் ஓர் ஏழையை மணந்து, தந்தை வீடகன்று எளியவாழ்க்கை நடத்த நேரினும் நேரும்.
ஆகவே, அவளை எந்நாளும் உடன்பிறந்தாராகிய ஆடவர் செறிந்த அன்புடன் பாதுகாத்து வருதல் அறமுறையாகும்.
பாகம்-பங்கு. இல்-வீடு. கிழத்தி-மனைவி. அடர்ந்த-செறிந்த ஆதரித்தல்-பாதுகாத்தல்.