அடிமை

அடிமை....
****

" அம்மா செல்போன் எங்கம்மா?"
ஸ்கூல்ல முடிந்து வீட்டிற்குள் நுழையும்போதே அதிகார தொனியில்...மேல்கட்ட சுருதியில் கத்திகொண்டே உள்ளேவரும் கலா.
" மொதல்ல ட்ரெஸை மாத்திட்டு கைகால் கழுவிட்டு வந்து டிஃபனையும் காப்பியையும் குடி..." என்று அவள் சொல்லி முடிப்பதற்குள்
" அம்மா வெறுப்பேத்தாதே. சும்மா...செல்போனை கொடுன்னா கொடு. என்னை டென்சன் ஆக்காதே"
அதே எட்டரகட்ட சுருதியில் கத்தினாள் கலா.
" அப்படி என்னடி அவசரம்? அதான் அஞ்சர மணிக்கு எடுத்தைனா தூங்கற வரைக்கும் பேசப்போறியே....அப்புறம் என்ன?"
" அம்மா அது என் பர்சனல் விஷயம். அதில தலையிட உங்களுக்கு உரிமையில்லை. சும்மா கண்டத பேசி கடுப்பேத்தாத. கொடுன்னா கொடுத்திட்டுப் போயேன்."
" ஏண்டி இப்ப என்ன சொல்லிட்டேன்னு இப்படி கத்தர. சாப்பிடுன்னு சொன்னதுக்கா... இத்தன பேச்சு ?"
" நான் சாப்பிடறன்... சாப்பிடல...அது என் இஷ்டம். இப்போ கொடுக்க முடியுமா? முடியாதா? அத மட்டும் சொல்லு"
" ஏண்டி நான் உன் அம்மாடி..."
" ஆங் ...நீ சொல்லித்தான் தெரிஞ்சிக்கினும். அனாவசிய பேச்செல்லாம் எதுக்கு? கொடுன்னா கொடு. அவ்ளோதான்."
" மொதல்ல நான் சொன்னத செய். அப்பறமாத்தான் நான் தருவேன்."
" ஐயோ..ஐயோ... எனக்கு மட்டும் ஏன்தான் இப்படியெல்லாம் நடக்குதோ? இந்த வீட்ல ஒரு போனுக்கு கூட தெனம் போராட வேண்டியிருக்குது. ஏன்தான் என்ன சாவடிக்கிறீங்களோ தெரியல."
" ஆமாண்டி உன்ன சாவடிக்கறதுக்குத்தான் பத்து மாசம் சொமந்து பெத்தேனாக்கும்."
" உன்ன யாரு பெக்க சொன்னது? நானா பெக்க சொன்னேன். எத கேட்டாலும் இத வேற சொல்லி சொல்லி காட்டுற. உனக்கே இது ஓவரா தெரியல. தேவையா உனக்கு? கேட்ட உடன கொடுத்திருந்தா இந்த பேச்சுக்கே இடமில்ல இல்ல "
" இந்த ரோஷமும் இந்த வீராப்பும் படிப்புல காட்டுனா பரவாயில்ல. அதல ஒன்னும் காணோம். ஒத்த மார்க்கில தெரியுது இல்ல உன் பவுஷு. நல்லா மார்க் வாங்குனாகூட பரவாயில்ல. மொதல்ல அதுல காட்டு உன் தெறமைய அப்புறமா வந்து பேசு. சரி...சரி...வந்து மொதல்ல சாப்பிடு."
" ஏதாவது ஒண்ண கேட்ட போதும் தேவையில்லாததை எல்லாம் பேசு. இப்ப செல்போனை கொடுக்கப் போறியா இல்லையா?.."
" மொதல்ல நான் சொன்னத செய். வந்து சாப்பிடு."
" தர முடியுமா? முடியாதா?"
" ம்ம்ம்...உன்னத்தான். தர முடியுமா? முடியாதா? முடியலைன்னா சொல்லு. நான் எப்போதும் ஒன்ன கேட்கமாட்டேன். உன்கூட பேசவும் மாட்டேன். அவ்ளவுத்தான்."
இது தினமும் கலாவுக்கும் அவ அம்மாவுக்கும் நடக்கின்ற சண்டையும்...சச்சரவும்தான்.
வீட்டுக்கு வீடு வாசப்படிதான்,என்பதுபோல் எல்லாருடைய வீட்டில் தினமும் நடக்கின்ற நிகழ்வுதான். இதற்கு காரணம்தான் என்ன? யோசியுங்கள்.
கொஞ்ச நேரம் மூஞ்சை தூக்கி வைத்துக்கொண்டு.... உம்மென்று உட்கார்ந்திருந்த கலா
பெட் ரூமுக்குள் போய் லைட்டெல்லாம் அணைத்துவிட்டு படுத்துகொண்டாள். மணி 8.30 ஆகிவிட்டது. " கலா கண்ணு வாடா..இப்பவாது கொஞ்சம் சாப்பிடு. என் கண்ணு இல்ல..செல்லம் இல்ல...டைம் பாரு 8.30 ஆயிடுச்சு பாரு. வா...வா...வந்து சாப்டிட்டைனா என் வேல முடியும். பாரு மொகம் எப்படி வாடி கெடக்குதுன்னு? வயிறு சப்புன்னு இருக்குது பாரு...ஓடியா ஓடியா..."
" போ..போயிடு. தொந்தரவு செய்யாதே."
" என் மேலே கோபத்தை எவ்வளவு வேணா வெச்சுக்கோ.உன் வயத்துமேல காட்டாத"
" மரியாதையா போயிடு ...கதவை சாத்திட்டு போ..." என்று போர்வையால் முகத்தை மூடிக்கிட்டு திரும்பி படுத்து கொண்டாள்.
அடுத்த நாள் 'பேரன்ட்ஸ் மீட். பள்ளிக்குப் போனாள் கலாவின் அம்மா. " வாங்கம்மா வாங்க. உட்காருங்க. கந்தசாமி போய் +2 A செக்சன்ல கலாவை கூட்டிட்டு வா. அம்மா உங்க பொண்ணு வீட்ல படிக்கிறாளா இல்லையா? எல்லா சப்ஜெக்ட்லயும் சுமார்தான். சில சப்ஜெக்ட்ல சிங்கிள் டிஜிட். இப்படியே போனா பாஸ் பண்றதே கஷ்டம்தான்."
" எங்க மிஸ் ...எந்நேரமும் செல்போன்தான். அப்படி என்னதான் பேசுவாங்களோ தெரியல. கேட்டா சப்ஜெக்ட்ல இருக்கிற சந்தேகத்தைத்தான் கேட்டுக்கிறேன். இதுல உங்களுக்கென்ன ப்ராபளம்? ஏன் சந்தேகப் பட்ரீங்களா? நிம்மதியா கொஞ்சம் நேரம் பேச விட்ரீங்களா? சே.... இது என்ன வீடா இல்ல ஜெய்லா? போன் பேசருத்துக்குக்கூட இங்க சுதந்தரம் இல்லன்னு கத்தி கூப்பாடு போடுறா. என்ன செய்யறதுனே தெரியல. எனக்கொரு சந்தேகம்... நைட் 10 மணிக்கு மேலதான் சப்ஜெக்ட்ல சந்தேகம் வருமா என்ன? ஏன் க்ளாஸ் நடக்கும்போதே சந்தேகத்தை கேட்டு தெரிஞ்சிக்கலாமே. டீச்சர விட ஒரே க்ளாஸ்மேட்டுக்கு சந்தேகம் தீக்கற அளவுக்கு சப்ஜெக்ட் தெரியுமா என்ன?"
" அம்மா.... பிள்ளைகளோடமுன்னேற்றத்துல உங்களுக்கும் பொறுப்பு இருக்குதம்மா. செல்போன ஏன் கொடுக்கிறீங்க? அதை கொடுத்தாலே கெட்டுப்போறதுக்கு சான்சஸ் அதிகமா இருக்கும்மா. நீங்கதான் கவனமா பாத்துக்கணும். எங்க ஸ்கூல்ல நாங்க ஸ்ட்ரிக்ட்டாத்தான் இருக்கோம்.இருந்தும் எங்க கண்லேயே வெரல விட்டு ஆட்டிடுறாங்களே."
"மிஸ்.... நீங்க செல்போன் கொடுக்காதீங்கன்னு கூலா சொல்லிட்டீங்க. ஆனா அது அவ்வளவு ஈஸியா என்ன? நாங்க ஒன்னு சொன்னா... ஆன்லைன்லதான் க்ளாஸெல்லாம் நடக்குது. எல்லா இன்பர்மேஷனும் ஆன்லைன்லதான். அப்படி இப்படினு எங்கள கார்னர் செஞ்சிடறாங்க. எங்களுக்கும் ஒன்னும் புரியறதில்ல. அவங்கள நம்பவும் முடியல..... நம்பாம இருக்கவும் முடியல.என்ன செய்யதுருனே புரியல. "
" அம்மா நீங்க சொல்றதும் ஓரளவுக்கு ஒத்துக்கிறேன். ஆனா இந்த டிஜிட்டல் உலகத்துல நாமும் போட்டிபோட வேண்டியிருக்குதே. என்ன செய்ய? ஆனா நான் ஒன்னு சொல்லுவேன். நீங்க கவனமா கண்காணிக்க வேணும் அம்மா. பையனா இருந்தாகூட பரவாயில்ல.பொண்ணு இல்லமா ?"
" என்னமோ சொல்றீங்க மிஸ்..எங்க வயத்துல நெருப்ப கட்டிக்கிட்டு ஒவ்வொருநாளும்
தள்ளறதுக்குள்ள எங்க உயிர் போய்...போய் வருது. மிஸ்..அவ பேசும்போது அந்த பக்கமா போனா போதும் ஒடனே போன ஆப் செஞ்சிடறா. இல்லைனா மியூட்ல போட்டுடுறா. அவதான் ஒவ்வொரு நம்பருக்கு ஒவ்வொரு கால் டியூன்ல வெச்சிருக்காளே . ' ஒருதல காதல தந்த..இந்த தறுதல மனசுக்குள் வந்த, காதலிக்க கைடு இல்ல சொல்லித்தர வா வாத்தின்னு.." இது ஒரு நம்பருக்கு. " கண்ணால கத பேச நீயும்...கை கோத்து நட போட நானும். வேறென்ன வேறென்ன வேணும். நீ மட்டும் நீ மட்டும் போதும்." " என் வாழ்க்கை இது தான்னு கதையாக சொல்ல.உன் பேரு இல்லாம ஒரு பக்கம் இல்ல",இப்படி ஒவ்வொன்னுக்கும் ஒவ்வொரு டியூன். கேட்டா பாட்டு கேட்கறத்துக்கு கூட சுதந்திரம் இல்லையான்னு கத்தறா. ஏதோ தப்புன்னு தெரியுது. ஆனா எங்களால ஒன்னும் செய்ய முடியலையே."
"அம்மா என்னதான் சொன்னாலும் நீங்கதான் பாத்துக்கணும்."
" சரிதான் .இதுல யாரை குத்தம் சொல்றதுன்னே தெரியல. எங்க ஜெனரேஷன சொல்றதா? இல்ல இவங்க ஜெனரேஷன சொல்றதா? ஆனா மிகப்பெரிய ஜெனரேஷன் கேப்புன்னு புரியுது. பலது எங்களால ஒத்துக்கவும் முடியல..அனுசரிச்சு போகவும் முடியல. ஒரே பயம் என்னன்னா ஒழுங்கா படிச்சி, ஒரு வேலைக்கு போய், அவ கால்ல சொந்தமா நின்னா போதும். நல்லபடியா கல்யாணம் செஞ்சி கொடுக்கற வரைக்கும் தப்பா ஒன்னும் நடக்காம இருந்தாலே போதும். கடவுளையும் அதுதான் வேண்டிக்கிட்டு இருக்கேன்."
" அம்மா இங்க நடக்கறத எல்லாம் உங்ககிட்ட சொல்லிடறாளா?"
" அட நீங்க ஒன்னு. வாய தொறந்தா பொய்..பொய்...பொய் மட்டும்தான். சில சமயம் உண்மையும் கூட வரும். எப்பன்னா....ஏதாவது கல்ச்சுரல்ஸ்...இல்ல ஏதாவது ட்ரெஸ்...நக... செலவுனா...மொதல்ல நிப்பா. அப்ப பாக்கணுமே.. கொரலெல்லாம் தேன் தடவி...அம்மா...மம்மி .... தாய் கெழவின்னு தாஜா செஞ்சி காரியத்த சாதிச்சிடுவா. ஆனா ஒன்னு மிஸ்...அவளுக்கு மூளையும் செயல் திறனும் கொட்டிக் கிடக்கிறது. வாய் உள்ள பிள்ளை பொழச்சிக்குவா..அது இவ லைஃப்ல ஹண்ட்ரெட் பர்சன்ட் பொழச்சிக்குவா. அதுல துளிகூட சந்தேகம் இல்ல. ஆனா இந்த பாழாப்போன செல்போன் வந்து என்னென்ன செய்யப் போகுதோன்னு மனசு கெடந்து அல்லாடுது. அவ..என்ன அவ...அவமட்டுமில்ல இந்த ஜெனரேஷனே என்னாகப் போகுதோ.அதுக்கு மொத்தமா அடிமையாகி கெடக்குதுங்களே. சாயந்தரம் 5.30 மணி ஆனா போதும் கை எல்லாம் நடுங்க ஆரம்பிச்சுடுது. ஒரு நிமிஷம் கூட சும்மா இருக்க முடியாருதில்ல. ஆன் செஞ்சி ஆப் செஞ்சி...மெசேஜ் வந்துடுச்சுன்னு வந்த உடனே பார்க்கணுமே...அவசர அவசரமா எடுத்து..பார்த்துவிட்டு மொகத்த மூடிக்கிட்டு ஒரு புன்சிரிப்பு ...இடியட்... எரும..என்று வாய்க்குள்ளேயே முணுமுணுக்கறது என்ன? கண்டகண்ட பாட்டையெல்லாம் டவுன்லோட் செஞ்சி அத எடிட் செஞ்சி ஸ்டேட்டஸாமே ஸ்டேட்டஸ் அதுல தெனமும் போட்டு..காலைல எழுந்தவுடன் பாழாப்போன அந்த செல்போனை ஆன் செஞ்சி அந்த ஸ்டேட்டஸப் பாத்துட்டுத்தான் பாத் ரூமுக்கே போரதுங்க. இது ஒரு விதமான பரிபாஷையோ என்னமோ தெரியவில்லை. "
" அம்மா கூல்...கூல்...என்னம்மா இப்படி பொங்கி எழுந்திட்டீங்க. எங்களுக்கும் புரிகிறது. கடைசியில் உங்களையும் எங்களையும் பூல் ஆக்கிட்டு அவங்க நெனச்சதை சாதிச்சிகிடுவாங்க. ஆனா ஒன்னு சொல்லிக்கிறேன். இந்த ஜெனரேஷனை ஹேண்டல் செய்வது கொஞ்சம் கஷ்டம்தான் ஒத்துக்கறேன். ஏன்னா இவங்க ரொம்பவே உணர்ச்சி வயப்பட்டவர்களாக இருக்கிறார்களே. சட்டென எதற்கும் முடிவெடுத்து விடுகிறார்கள். அதன் சாத பாதகங்களை பற்றி கொஞ்சமும் கவலைப் படுவதில்லை. கையை கிழிச்சிக்கிறது...வெஷத்தை சாப்பிடறது... ஏன் உயிரையே விட்டுடறது. இப்படின்னு ஏதாவது ஏடாகூடமான காரியங்கள் செய்யறதால நாம கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்க வேண்டி இருக்கிறது. கொஞ்சம் அமைதியா இருங்கமா. நடக்கறதுதான் நடக்கும்."
" மிஸ் எனக்கும் அது புரிகிறது. இப்ப பேப்பர்லேயும்...டிவியிலும் வர நியூஸைப் பாக்கும் பொது ஈர கொலையே ஆடிப்போகுதே என்ன செய்ய? நாங்க ஒன்னும் இவங்களுக்கு எதிரி இல்ல. இவங்க வாழ்க்கை சொகமா எந்த ஒரு கஷ்டம் படக்கூடாதேன்னுதான் இந்த பெத்த வயறு கெடந்து துடிக்குது. ஒவ்வொரு தடவை நம்மை தேத்திக்கிட்டாலும் ஒவ்வொரு தடவை தாங்க முடியாம போயிடுதே. சரி மிஸ் எங்கேயோ தொடங்கி எங்கேயோ போய்ட்டோம். என் பிள்ளையை கொஞ்சம் பாத்துக்கோங்க"
" கலா வா..வா..இத்தன நேரம் உன் அம்மாகிட்ட பேசிகிட்டு இருந்தேன். உன் எதிர் காலத்தைப் பற்றித்தான் பேசிகிட்டு இருந்தோம். ஏன் வீட்ல போய் புக்கைத் தொடராதே இல்லையா? கணக்கு வரலையா? பத்து தடவ போட்டுப்போட்டு பாரு. டிராயிங் வரலையா நூறு தடவ வரஞ்சி வரஞ்சி பாரு. அப்புறம் பாரு ரவி வர்மா போல வரைய ஆரம்பிச்சுடுவா. என்ன செய்யறீயா? அடுத்த மீட்ல உங்க அம்மா முகத்துல சந்தோஷமும்.., பெருமிதமும்தான் தெரியனுமே தவிர கொஞ்சமும் கவலையோ...டென்ஷனோ தெரியக்கூடாது. இது எல்லாம் உன் கையாலதான் இருக்கு. ஒழுங்கா படிப்பியா? அடுத்த தடவ நல்ல மார்க் எடுக்கணும். அவங்க மானத்த மாத்திரம் இல்ல நம்ம ஸ்கூ லோட மானமும் உன் கைலதான் இருக்கு. உன் கிட்ட எல்லா திறமையும் இருக்கு. ஆனா நீ அதை வீணடிச்சிக்கிட்டு இருக்க. கொஞ்சம் ஒரு முக படுத்து போதும் நீ எங்கேயோ போயிடுவ. செல்போனை யூஸ் செய். வேணாம்னு சொல்லல. பாத்து யூஸ் பண்ணு. ரெண்டுபக்கமும் கூரான கத்தி. அதை நல்லதுக்கு மட்டும் பயன்படுத்திகொள். எதிரிகளை கொன்னு வெற்றிவாகையும் சூடிக்கலாம். கழுத்தை அறுத்து தற்கொலையும் செஞ்சிக்கிலாம். வெற்றிவாகை சூட முயற்சிசெய். வாழ்க்கை ...வாழ்வென்பது....வாழப்போவது ஒரு முறைதான். போலிகளை கண்டு ஏமாறாமல் அசலை கையகப்படுத்தி சாதனை செய். உண்மையை பேசு.பெற்றோருக்கு உண்மையா இரு. ஏன்னா இவங்க உனக்காகவே வாழறவங்க. ஒரு கத தெரியுமா? ஒரு காதலி, அவன் காதலை ஏத்துக்கணும்னா அவன் அம்மாவோட இருதயத்தை கொண்டு வந்தா ஏத்துக்கறேன்னு சொல்லிட்டா. அவனும் அவன் அம்மாகிட்ட போய் சொல்ல, அவன் அம்மாவும் அவ இதயத்தை சந்தோஷமா பிடுங்கி கொடுக்குறா. ஆனா அவன் காதலியோ அவன் காதலையும் நிராகரித்தது மட்டும் இல்லாமல் அவன் அம்மாவின் இதயத்தையும் வீதியில தூக்கி போட்டுடுறா. அவன் நிலை கொலஞ்சி தடுமாறி நடந்து வரும்போது கல் தடுக்கி விழும்போது ' அம்மா......ஆன்னு கத்தி விழுந்து அழும்போது "மகனேன்னு" அவன் அம்மா இதயம் மேலும் துடிச்சிச்சாம். அதனால பெத்தவங்க மனசு கோணாம நடந்துக்கோ. இப்போ உன் முழு கவனமும் படிப்பிலும் உன் எதிர்காலத்திலும்தான் இருக்கணும். மொதல்ல உன் லட்சியத்தை வெற்றிகரமா முடி. அதற்கு பிறகு நீ பரிசா என்ன கேட்டாலும் அவங்க கொடுக்க தயாரா இருக்காங்க. அவங்க இதயத்தைக்கூட...உன் போகஸ் முழுசும் படிப்பிலேயே இருக்கட்டும். மொதல்ல உன் கால்ல நில்லு. உலகத்தை புரிஞ்சிக்கோ. உணர்ச்சிக்கு இடங்கொடுக்காதே. ஆல் தி பெஸ்ட் ..."
"எப்படியோ மிஸ்...இங்கிலீஸ்காரன் கிட்ட இருந்து விடுதலை வாங்கிட்டோம். ஆனா இந்த செல்போன் போதையிலிருந்து இவங்களை மீட்டு, விடுதலை கீதம் பாடிட்டா போதும். அந்த நாளுக்குத்தான் காத்திட்டிருக்கிறேன். செல்போனை நல்லதுக்கும்... முன்னேற்றத்துக்கும் பயன் படுத்திக்கோங்க. ஏவாள் கைல கெடச்ச ஆப்பிள் போல, சாத்தான் ஓதர மகுடிக்கெல்லாம் மயங்காம.... ஆண்டவன் சாபத்தை வாங்காம இருந்தா சரி"

எழுதியவர் : ஜீவன் (மகேந்திரன்) (30-Jan-23, 9:34 pm)
சேர்த்தது : ஜீவன்
Tanglish : adimai
பார்வை : 228

மேலே