உயின்பிரிட் ஐயர் - வெண்பாவில் வித்தகமும், புலமையின் பெருமையும்
உயின்பிரிட் ஐயர் (1810 - 1879) திருநெல்வேலியைச் சேர்ந்த வாழையடி என்னும் ஊரில் பிறந்த தமிழர். தமிழ், ஆங்கிலம், இலத்தீன், கிரேக்கம், எபிரேயம் என்னும் மொழிகளைக் கற்றவர். கனம் இரேனியூசையர் இவரைப் படிக்க வைத்தார். 1827 முதல் சென்னையிலும், 1830 இல் யாழ்ப்பாணத்து வட்டுக்கோட்டை சாஸ்திரப் பள்ளியிலும் படித்துத் தேர்ந்தார். பின்னர் பாளையங்கோட்டை வித்தியா சாலையில் ஆசிரியராக அமர்ந்தார். 1845 இல் மதுரையில் வேதசாஸ்திரப் பள்ளியில் ஆசிரியராகப் பணி புரிந்தார். 1855 இல் முழு குருப்பட்டம் பெற்றுக் கிறிஸ்துவ குருக்கள் வரிசையில் சேர்க்கப்பட்டார்.
இவர் Bunyan’s Holy War என்னும் நூலின் மொழிப் பெயர்ப்பாக ’திருப்போராடல்’ என்ற நூலை 1844 ல் இயற்றினார். தாவீதரசன் அம்மானை (1865), உதிரமகத்துவம் (இரண்டு பாகங்கள்), இரத்தினாவளி நாடகக் கதை, சான்றோர் குலமரபு காத்தல் ஆகிய நூல்களை இயற்றியிருக்கிறார்.
இவரைப் படிக்க வைத்த இரேனியூசையர் 1838 ஆம் ஆண்டு (ஆறெட் டரைவயதில் – நாற்பத்தெட்டரை வயது) காலஞ்சென்ற போது, அவர்மீது உயின்பிரிட் ஐயர் பாடிய கையறு நிலைச்செய்யுள் கீழேயுள்ளது.
மூலப்பதிவு link ம் தருகிறேன். மயிலை சீனி.வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16, தமிழ் இலக்கிய வரலாறு பத்தொன்பதாம் நூற்றாண்டு, புலவர்களும், நூல்களும் என்ற பதிவில் 174 ஆம் பக்கத்தில் தரப்பட்டுள்ள பாடல்:
ஆயிரத் தெண்ணூற் றாறாரிரு வருடம்
காய மடைந்த குணமைந்தா - காயமதில்
ஆறெட் டரைவயதில் அப்பதிக்குப் போனீரோ
இரேனியூ சையா நீர்.
இப்பாடல் வெண்பாவாக அமைக்கப்பட்டிருக்கிறது. இரேனியூசையா என்ற அறிஞர் 1838 ஆம் வருடம் இறந்ததைப் பாடலில் குறிப்பிட்டிருக்கிறது. அப்பொழுது அவருக்கு நாற்பத்தெட்டரை வயது.
இவற்றை வெண்பாவில் அமைக்கப்பட்ட முறை அருமையும்,நயமும் கூட. தனிச்சொல்லும் அமைந்திருக்கிறது. முதலடியில் 2, 3, 4 (தெண்ணூற் றாறாரிரு வருடம்) சீர்களுக்கு இடையிலும், மூன்று நான்காம் அடியின் (போனீரோ இரேனியூ) இணைப்பிலும் தளை தட்டுகிறது.
இரேனியூசையா என்பதை மோனைக்காக யூ என்றும், எதுகைக்காக றெ என்றும் மாற்றம் செய்து, யூறெனி யூசையா என்று மாற்றம் செய்தேன். மேலும் போனீரோ இரேனி யூசையா என்றிருந்தால் தளை தட்டுகிறது. உயின்பிரிட் ஐயர் வெண்பாவில் எழுதியது தவறாயிருக்க முடியாது.
மூலப்பதிவில் தவறிருக்கலாம் என்று கருதி இப்பாடலில் சிறு மாற்றங்கள் செய்து இருவிகற்ப நேரிசை வெண்பாவாகச் செய்திருக்கிறேன். இப்பாடலைப் பதிவதற்கு, 1838 ஐக் குறிக்க உபயோகித்த சொற்பிரயோகத்தின் அருமையை வியந்து பதிகிறேன்.
இரு விகற்ப நேரிசை வெண்பா
ஆயிரத் தெண்ணூற்றா றாரி ருவருடம்
காய மடைந்த குணமைந்தா - காயமதில்
ஆறெட் டரைவயதில் அப்பதிக்குப் போனீரோ
யூறெனி யூசையா நீர்.
இவருடைய வாழ்க்கை வரலாற்றை இவருடைய மகன் என்றி மார்ட்டின் உவின்பிரிட் உபாத்தியாயர், “கனம் பொருந்திய உவின் பிரிட்டையர் ஜீவ விருத்தாந்தம்” என்னும் பெயரால் எழுதி 1880 ல் அச்சிட்டார்.
இதுபோல, அரசஞ் சண்முகனார் வள்ளுவர் நேரிசை என்ற நூல் எழுதும்பொழுது, தற்சிறப்புப் பாயிரமாக எழுதிய முதலடி திருவள்ளுவ மாலையின் முதற் பாட்டு முதலடியாகும். திருவள்ளுவர் தம் திருவடிகளைத் தலைமேற் கொண்டு, அவர் அருளிய மறைப்பாட்டினோடு யானும் அரைப்பாட்டினை ’நேரிசை’ என்னும் கருத்துப்பட,
நேரிசை வெண்பா
திருத்தகு தெய்வத் திருவள் ளுவர்தாள்
வருத்தமறச் சென்னிமிசை வைத்துக் – கருத்திருத்தி
அன்னார் மறைப்பாட்டோ(டி) யானுமரைப் பாட்டிசைப்பேன்
முன்னே ரிசைப்பேர் மொழிந்து. 1:1
- என்று அரசஞ் சண்முகனார் பாடியுள்ளார்.
இதையொற்றி, சோழவந்தான் ஊரின் சிதம்பர விநாயகரின் மேல் இரு விகற்ப நேரிசை வெண்பாவாக 108 பாட்டெழுத காப்புச் செய்யுளாக நான் எழுதிய வெண்பாவிலும் வெண்பா இலக்கணத்திற்குட்பட்டு, நூற்றெட்டைக் குறிக்க ’’நூறோடு ஏழுமொன்றும்’ என்றும் பதிவு செய்திருக்கிறேன்.
நேரிசை வெண்பா
சோழவந்தான் ஊரின் சிதம்பரவி நாயகனே
வேழமுனை வேண்டுகிறேன்; நூறோடு - ஏழுமொன்றும்
வெண்பாக்கள் செய்திடவே வேண்டும் வரமருளி
எண்ணம் நிறைவேற்று நீ! 1 *