577 வளர்த்தோர்க்குதவும் மாமரம்போல் வகுத்தானை வணங்கு - தெய்வத்தன்மையும் வாழ்த்தும் 35

அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)
(விளம் வருமிடத்தில் மாங்காய்ச்சீர் அருகி வரும்)

விருகமுந் தனைவ ளர்த்தோர்
..வியப்புற வேலை செய்யுந்
தருவொடு பயிர்வைத் தோர்க்குத்
..தனிப்பய னல்கு நம்மை
ஒருபொரு ளெனச்சி ருட்டித்(து)
..உலகமு மற்ற யாவுந்
தருமொரு முதலைப் போற்றாத்
..தன்மையோர் புன்மை யோரே. 35

- தெய்வத்தன்மையும் வாழ்த்தும், நீதிநூல்
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

நாற்கால் விலங்கும் தன்னை வளர்த்தோர்கள் வியக்கும்படி பலவகை வேலைகளை மனங்கூடி மகிழ்வொடும் செய்யும்.

மரம் செடி கொடிகளாகிய நிலைத்திணைப் பயிர்களும் பாடுபட்டு வைத்து வளர்த்தோர்க்குத் தளிர், இலை, அரும்பு, பூ, பிஞ்சு, வடு, காய், பழம், கனி முதலிய சிறந்த பயன்களைத் தரும்.

ஆண்டவன் மக்களாகிய நம்மை ஒரு பொருளாகத் திருவுளங் கொண்டு உடம்பொடு பொருத்திப் படைத்து உலகமும் உண்பொருளும் பிறவும் தந்தருளினன்.

அப்படிப்பட்ட முழுமுதலை அன்பால் நினைந்து ஆர்வத்தால் வழுத்திக் காதலாற் கைகூப்பித் தொழுதலாகிய போற்றுதலைச் செய்யார் மிகவும் கடையவராவர்.

விருகம் - மிருகம்; விலங்கு. வியப்பு - மருள்; அதிசயம். சிருட்டி - படைப்பு.
புன்மையோர் - கடையர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (5-Feb-23, 8:38 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 9

சிறந்த கட்டுரைகள்

மேலே