578 கடவுளை எய்தார் கடவார் பிறப்பு - தெய்வத்தன்மையும் வாழ்த்தும் 36

அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
விளம் மா தேமா அரையடிக்கு
(விளம் வருமிடத்தில் மாங்காய்ச்சீர் அருகி வரும்)

கரும்புணக் கூலி கேட்குங்
..கருமம்போல் வறுமை யாளர்க்(கு)
அரும்பொரு ளினைத்துன் புற்றோர்க்(கு)
..ஆனந்த சாக ரத்தை
வரும்பிணிக் கொரும ருந்தை
..மனத்தின்கண் ஒளிர்தீ பத்தை
விரும்புவோர் மனோக ரத்தை
..மேவுறார் கோவு றாரே. 36

- தெய்வத்தன்மையும் வாழ்த்தும், நீதிநூல்
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

கரும்பு தின்பதற்குக் கூலிகேட்கும் உண்மையுணராதாரைப் போன்று, மிடிபட்டவர்க்கு வேண்டும் மிகுபொருளாயிருப்பவன் கடவுள். நீங்காத் துன்புற்றோர்க்கு ஓங்கும் இன்பக்கடல் கடவுள்.

வினைப்பயனாலும் வேண்டாச் செயலாலும் வரும் நோய்க்குத் தக்க மருந்து கடவுள். தூய்மையும் வாய்மையும் அன்பும் தொடர் நினைப்புமுள்ள நல்லோர் தூயமனத்தின்கண் நின்றொளிரும் நந்தா விளக்கு கடவுள்.

திண்ணியராய் எண்ணுவார் எண்ணத்தை ஈடேறச் செய்யும் எழில் கடவுள். இத்தகைய கடவுளின் இணையடியின்பத்தினைப் பொருந்தாதவர் பிறவிப் பெருங்கடல் நீந்தி இறைவன் பேரின்ப வீட்டை எய்தார்.

கருமம் - செய்கை. ஆனந்தம் - இன்பம். சாகரம் - கடல். கோ - வீடு.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (5-Feb-23, 8:44 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 12

சிறந்த கட்டுரைகள்

மேலே