100 படிப்பிலாப் பெண்ணென்றால் பாதியுடற்கு அழகு செய்யாதது போலாகும் – மாதரைப் படிப்பித்தல் 7

கலிவிருத்தம்
(விளம் விளம் மா கூவிளம்)
(மாச் சீரின் இறுதியில் குறிலோ, குறில்+ஒற்றோ தான் வரும். நெடில், நெடில்+ஒற்று வராது)
(விளம் வருமிடத்தில் மாங்காய்ச்சீர் அருகி வரலாம்)

நீதிநூன் மைந்தர்க்கு நிகழ்த்தி மென்மலர்
ஓதியர்க்(கு) ஓதிடா தொழித்தன் மெய்யினில்
பாதியை யேயலங் கரித்துப் பாதிமெய்
மீதினி லணியின்றி விடுத்தல் ஒக்குமே. 7

– மாதரைப் படிப்பித்தல்
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

”அற நூல்களை ஆண் பிள்ளைகளுக்குக் கற்பித்து, அழகிய கூந்தலையுடைய மென்மையான மலர் போன்ற பெண்களுக்குக் கல்வி கற்பிக்காது விடுவது, உடம்பில் ஒரு பாதியை ஆடை அணிகலன்களால் அழகு செய்து, மற்றொரு பாதி உடம்பில் அழகு செய்யாமல் விடுவதற்கு ஒப்பாகும்” என்று பெண்களுக்கு கல்வியறிவு அழகு செய்யும் என்று குறிப்பிடுகிறார் இப்பாடலாசிரியர்.

நீதி - அறமுறை. மைந்தர் - ஆண்கள். ஓதியர் - கூந்தலையுடைய பெண்கள். அலங்கரித்தல் - அழகுபடுத்தல்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (5-Feb-23, 8:58 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 14

சிறந்த கட்டுரைகள்

மேலே