101 கண்போல் பெண்களும் காணின் சமமே – மாதரைப் படிப்பித்தல் 8
கலிவிருத்தம்
(விளம் விளம் மா கூவிளம்)
(மாச்சீரின் இறுதியில் குறிலோ, குறில்+ஒற்றோ தான் வரும். நெடில், நெடில்+ஒற்று வராது)
(விளத்தின் இடத்தில் மாங்காய் வருவதும் உண்டு)
இக்கினை நகுமொழி யெழின்மின் னாரினாண்
மக்கள்மிக் கோரெனல் மடமை யாமிரண்(டு)
அக்கமும் ஒக்குமே யன்றி நல்லகண்
எக்கண்மற் றெக்கணே யிழிவு டைக்கணே.. 8
– மாதரைப் படிப்பித்தல், நீதிநூல்
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்
பொருளுரை:
”கரும்பின் சுவையைப் பழிக்கும்படி இனிமையாகப் பேசும் அழகிய பெண்களை விட ஆண் பிள்ளைகள் சிறந்தவர்கள் என்று சொல்வது அறியாமை ஆகும்.
ஒருவர்க்கு அமைந்த இரண்டு கண்களும் ஒன்றாகவே கருதப்படுமே அன்றி, நல்ல கண் எது? இழிவுடைய பயனில்லாத கண் எது?” எனப் பிரித்துப் பார்க்கக் கூடாது என்பது போல, ஆண் பிள்ளைகளும், பெண் பிள்ளைகளும் சமமாகக் கருதப்பட வேண்டும் என்கிறார் இப்பாடலாசிரியர்.
இக்கு - கரும்பு. அக்கம் - கண்.